கர்நாடக மாநிலம், தகவல் தொழில் நுட்பத்துறைகளில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. மாறாக, புராண மிகுந்த கோயில்களைக் கொண்டு பெருமை மிகு மாநிலமாக திகழ்கிறது.
ஒன்றா.. இரண்டா… நூற்றுக் கணக்கான பல திருக்கோயில்களைக் கொண்டு பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது, கர்நாடக மாநிலம். கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான கோயில் மகான்களாலும், அந்த ஊர் ராஜாக்களாலும் கட்டப் பட்டிருக்கின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் கோயில் கொண்டுள்ள சிறப்பு மிக்க ஆஞ்சநேயஸ்வாமியை தரிசிக்க விருக்கிறோம், இந்த தொகுப்பில்.
மின்டோ பெயர் காரணம்
இந்த ஆஞ்சநேயஸ்வாமி கோயிலை “மின்டோ ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோயில்’’ (Minto Anjaneyaswamy Temple) என்றே அழைக்கிறார்கள், பக்தர்கள். அதென்ன மின்டோ? அதை அறிய சுவாரஸ்ய கதை இருக்கிறது. பெங்களூரில், சாமாஜ்பெட் திப்பு சுல்தான் அரண்மனை சாலையில், ஏ.வி.ரோடு காவல் நிலையத்திற்கு எதிரே, மின்டோ என்னும் பெயரில் அரசு கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அதற்கு எதிரேதான் இந்த ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. கண் அறுவைசிகிச்சைக்கு வரும் மக்கள், எதிரே இருக்கும் ஆஞ்சநேயரை தரிசித்துவிட்டு, அறுவை சிகிச்சையினை மேற்கொண்டால், சிகிச்சை தடையின்றி வெற்றி அடைகிறது. இந்த காரணத்திற்காகவும், மேலும், மின்டோ கண் மருத்துவமனையின் எதிரே ஆஞ்சநேயர் கோயில் இருப்பதால், ஆஞ்சநேயர் கோயிலுக்கும், மின்டோ ஆஞ்சநேயர் கோயில் என பெயர் வந்துவிட்டது.
வரஹஸ்தத்தில் அபயமும், இடஹஸ்தத்தில் கதையையும், வாலில் மணி என வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்களுக்கே உரித்தான அடையாளத்துடன் காட்சியளிக்கிறார். மின்டோ ஆஞ்சநேயஸ்வாமி என்பது திருக்கோயிலின் பெயர். ஆனால், இவரின் உண்மையான திருநாமம் “ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயஸ்வாமி’’ என்பதே ஆகும்.
கனவில் வந்த ராகவேந்திரர்
மின்டோ ஆஞ்சநேயஸ்வாமிக்கு தினமும் பூஜை செய்வதற்கு ஒரு அர்ச்சகர் தேவைப்பட்டார். எங்கெங்கோ சென்று அர்ச்சகரை தேடிப்பார்த்தும், அர்ச்சகர் கிடைக்கவில்லை. இப்படியே நாட்கள் செல்ல, மந்திராலயத்தில் ராகவேந்திரஸ்வாமிக்கு சேவைகளை செய்து வந்த வித்வான் விட்டலாச்சாரியா என்னும் பக்தனின் கனவில் “பெங்களூருவில் பிரசன்ன ஆஞ்சநேயஸ்வாமி கோயில் உள்ளது. அங்கு சென்று தினமும் அனுமனுக்கு பூஜை செய்’’ என்று ராகவேந்திரசுவாமி உத்தரவிட்டார். அதன் படி, இந்த கோயிலை கண்டுபிடித்து விட்டலாச்சாரியா, 1926-ஆம் ஆண்டு முதல் பிரசன்ன ஆஞ்சநேயஸ்வாமியை முறைப்படி பூஜைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். அதன் பிறகு, இன்றளவிலும் விட்டலாச்சாரியாவின் வம்சத்தினர்களே பிரசன்ன ஆஞ்சநேயருக்கு பூஜைகளை செய்து வருகிறார்கள்.
அனுமனை தரிசித்த ஆங்கிலேயர்கள்
விட்டலாச்சாரியா பூஜைகளை மேற்கொள்ளும் காலத்தில், மைசூரின் திவானாக இருந்த சர். மிர்சா முகமது இஸ்மாயில் என்பவர் இந்த திருக்கோயிலை அழகாக புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார். மின்டோ ஆஞ்சநேயர் கோயிலுக்கு பிரிட்டிஷ் காலத்தில் வசித்த பல பிரபலங்கள் வந்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆம்! பிரிட்டிஷ் அதிகாரியான லாட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயகளாக (வைஸ்ராய் என்பது, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் தலைமை ஆளுநரின் பதவி) இருந்த விலிங்டன், இர்வின் ஆகியோர் இந்த மின்டோ அனுமனை வழிபட்டிருக்கிறார்கள். மேலும், இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் தரிசித்து சென்றிருக்கிறார்கள் என்பது வரலாற்றின் சுவையான தகவல்கள்.
கே.ஆர்.மார்க்கெட்டும் அனுமனும்
மின்டோ அனுமன், மிக விரைவாக வேண்டுவதை நிறைவேற்றுவதாக இங்குள்ள பக்தர்களால் சொல்லப்படுகிறது. உடல் ஆரோக்கியம், கல்வி, செல்வம், குழந்தைப்பேறு போன்றவற்றுக்காக பல பக்தர்கள் மின்டோ அனுமனை வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டியதை மிக விரைவாக நிறைவேற்றுகிறார், அனுமன். அதே போல், பக்தர்களின் வேண்டுதல்கள் விரைவாக நிறைவேற “ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி’’ என்னும் மிக உயர்ந்த மந்திரத்தை அர்ச்சகர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் கோயிலின் அருகில், கே.ஆர்.மார்க்கெட் உள்ளது. சென்னையில் எப்படி கோயம்பேடு மார்க்கெட் உள்ளதோ, அது போல், பெங்களூரில் கே.ஆர்.மார்க்கெட் பிரபலம். இந்த மார்க்கெட்டில் காய் – பழங்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகள், விற்பனை செய்யும் தங்களின் மூட்டைகளை அனுமனின் முன்பு வைத்து, வியாபாரம் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்று நன்கு வேண்டிக்கொண்டு, மூட்டையை பிரித்து சில காய் – பழங்களை காணிக்கையாக அனுமனுக்கு வைத்துவிட்டுசெல்கிறார்கள். இப்படி செய்வதன் மூலமாக, அன்றைய வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதாக கே.ஆர்.மார்க்கெட் வியாபாரிகள் அனுபவப்பூர்வமாக தெரிவிக்கிறார்கள்.
எப்படி செல்வது: பெங்களூர், கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து மிகமிக அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரம் பயணித்தால் போதும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும்.
The post பிரிட்டிஷ் வைஸ்ராயர்கள் வழிபட்ட மின்டோ ஆஞ்சநேயர் appeared first on Dinakaran.