பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

1 week ago 5

லக்னோ:ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளார் என்று கர்நாடக பாஜ நிர்வாகி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டிஷ் குடியுரிமை மறைத்ததாகவும், இந்த குற்றச்சாட்டில் அவரது எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த பாஜ நிர்வாகி விக்னேஷ் சிசிர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் இமெயில்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதன் காரணமாக அவர் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்றும், மக்களவை உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 21ம் தேதி நடந்த விசாரணையின் போது ஆஜரான ஒன்றிய அரசின் துணை சொலிசிட்டர் எஸ்.பி. பாண்டே, ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து அந்த நாட்டிடம் விவரங்களை அரசு கோரியுள்ளது. எனவே இறுதி முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து மே 5ம் தேதி வரை அவகாசம் அளித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ராஜிவ் சிங் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், மனுதாரரின் புகாரை தீர்ப்பதற்கு ஒன்றிய அரசு எந்த கால அவகாசத்தையும் வழங்க இயலவில்லை. எனவே மனுவை நிலுவையில் வைப்பதற்கு எந்த அவசியமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினர்.

 

The post பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article