பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் கதவுகள், ஜன்னல்கள் அடைப்பு; பயணிகள் கொந்தளிப்பு

1 week ago 3

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேசத்திற்கு உட்பட்ட சத்தார்பூர் மற்றும் ஹர்பால்பூர் ரெயில் நிலையங்களில் நேற்றிரவு பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் ரெயில்கள் சென்றன.

ஆனால், மேற்குறிப்பிட்ட 2 ரெயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்த ரெயில்களில் பயணித்த நபர்கள் ரெயில்களின் கதவுகளை பூட்டி கொண்டனர் என கூறப்படுகிறது. இதனால், நடைமேடையில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் கதவை திறக்க கோரி கூச்சலிட்டனர். அப்போதும் கதவு திறக்கப்படாத சூழலில், ஆத்திரமடைந்த பயணிகள் ரெயிலை நோக்கி கற்களை வீசினார்கள்.

இதுபற்றி ஜான்சி ரெயில்வே மண்டல மக்கள் தொடர்பு துறை அதிகாரி மனோஜ் குமார் சிங் கூறும்போது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.

தேவைப்பட்டால், கோரிக்கைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என கூறினார். பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றிய சில வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளிவந்து வைரலாகி உள்ளன. ரெயில் பயணிகள் கற்களை எடுத்து வீசும் காட்சிகளும், ரெயிலை திறக்க கோரிய காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இதுபற்றி சத்தார்பூர் நகரை சேர்ந்த ஆர்.கே. சிங் என்ற பயணி கூறும்போது, நான் பிரயாக்ராஜ் நகருக்கு மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு சங்கமத்தில் புனித நீராட செல்கிறேன்.

ஆனால், இந்த ரெயிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, அரசு ரெயில்வே போலீசார் சென்று ரெயிலின் கதவுகளை திறந்து விட்டனர்.

Read Entire Article