டெல்லி: பிரயாக்ராஜில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் சுல்ஃபிகார் ஹைதர், அலி அகமது உள்ளிட்டோரின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அலகாபாத் ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வீடுகளை இடிப்பதாக சனிக்கிழமை நோட்டீஸ் அளித்த நிலையில் மறுநாளே புல்டோசர் கொண்டு இடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; பிரயாக்ராஜில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. அவகாசம் ஏதும் வழங்காமல் நோட்டீஸ் அளித்த 24 மணி நேரத்துக்குள் வீடுகளை இடித்துள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேல்முறையீடு செய்ய போதுமான அவகாசம் வழங்கி மாநில அரசு நியாயமான முறையில் செயல்பட வேண்டும்.
சட்ட நடைமுறையை பின்பற்றாமல் செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. நியாயமற்ற செயலை ஒரு முறை பொறுத்துக் கொண்டால் மீண்டும் அது தொடரும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post பிரயாக்ராஜில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.