பிரம்மோற்சவ விழா: பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

3 months ago 25

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்கிறது. விழாவின் தொடக்க நாளான நேற்று மாலை 5.45 மணியில் இருந்து 6 மணிக்குள் மீன லக்னத்தில் தங்கக்கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.

முன்னதாக சிவப்பு நிறத்தால் கருடன் உருவம் அச்சிடப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்து, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி முன்னிலையில் தங்கக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் தலைமை அர்ச்சகர்கள், ஆகம ஆலோசகர்கள், வேதப் பண்டிதர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

Read Entire Article