கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... பேய் விரட்டுவதாக கூறி கூட்டு பாலியல் பலாத்காரம்

6 hours ago 3

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் தந்தை அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த மந்திரவாதி கர்ப்பிணி பெண்ணை பார்த்து, அவரது உடலில் பேய்கள் குடியிருப்பதாகவும், உடனடியாக பேய் விரட்டுவதற்கான சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணின் தந்தை, பேய் விரட்டும் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

பின்னர் மந்திரிவாதி கூறிய இடத்திற்கு தனது மகளை அவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு அறைக்குள் கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்ற மந்திரவாதி, தந்தையை வெளியே காத்திருக்குமாறு கூறியிருக்கிறார். பின்னர் அறைக்குள் சென்று கர்ப்பிணி பெண்ணை மந்திரவாதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஆனால் இது குறித்து தந்தையிடம் கூறக்கூடாது என்று மந்திரவாதி மிரட்டியதால், அந்த பெண் அமைதியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து 2-வது முறை மீண்டும் மந்திரவாதியிடம் அந்த பெண்ணை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். அப்போதும் அதே பாணியில் கர்ப்பிணி பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்று மந்திரவாதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 3-வது முறை மந்திரவாதியிடம் சென்றபோது, உதவியாளர்கள் என்ற பெயரில் அவருடன் மேலும் 2 பேர் இருந்துள்ளனர். இந்த முறை அவர்கள் 3 பேரும் சேர்ந்து கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆனால் மந்திரவாதியின் மிரட்டல் காரணமாக, தனக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளை தனது தந்தையிடம் கூற முடியாத சூழலில் அந்த பெண் இருந்துள்ளார்.

இதனிடையே கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கியது. இதனால் கவலையடைந்த அவரது குடும்பத்தினர், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பிறகுதான் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மந்திரவாதி, அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article