
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கர்ணனாக நடித்த திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில், அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன், யாஸ்கினாக கமல்ஹாசன், கிருஷ்ணராக கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்தனர்.
இப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானநிலையில், உலகம் முழுவதும் ரூ,1,100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. தற்போது இதன் 2-ம் பாகப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கல்கி முதல் பாகத்தின் வெற்றியில் இருந்தே, அனைவரின் பார்வையும் 2-ம் பாகத்தை நோக்கியே உள்ளது. இந்நிலையில், சமீபத்திய நேர்காண்ல் ஒன்றில், கல்கி 2 பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் நாக் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு இறுதியில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, முதல் பாகத்தில் குறைவான நேரம் திரையில் தோன்றிய பிரபாஸ் இரண்டாம் பாகத்தில் அதிக நேரம் காணப்படுவார் எனவும், ஏனென்றால் இது கர்ணன் மற்றும் அஸ்வத்தாமா கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது எனவும் கூறினார்.