மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை பந்த்ராவில் பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதி வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல சயிப் அலிகான் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான்.
இதனை கவனித்த நடிகர் சயிப் அலிகான், அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அவரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதில், முதுகு தண்டுவடம், மார்பு உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 இடங்களில் கத்தி ஆழமாக கிழித்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் விரைந்து குணமடைய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சயிப் அலிகான் தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாகவும், நலமாக இருப்பதாகவும் லீலாவதி மருத்துவமனை டாக்டர் நிதின் டாங்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, அடையாளம் தெரியாத ஒருவரால் தாக்கப்பட்ட சயிப் அலிகான் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகுத்தண்டில் கத்திக்குத்து ஏற்பட்டதால் அவருக்கு மார்பு முதுகுத்தண்டில் பெரும் காயம் ஏற்பட்டது. கத்தியை அகற்றி, கசிந்த முதுகெலும்பு திரவத்தை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இடது கையில் இரண்டு ஆழமான காயங்களும், கழுத்தில் ஒரு ஆழமான காயமும் பிளாஸ்டிக் சர்ஜரி குழுவால் சரிசெய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
The post பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் தற்போது நலமாக உள்ளார்: மருத்துவர்கள் நிர்வாகம் தகவல்! appeared first on Dinakaran.