
புதுடெல்லி,
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. இந்தியாவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கு எல்லையில் தற்போது பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ராணுவத் தளபதி உபேந்திர திவேதி சந்தித்து பேசியுள்ளார். பிரதமரின் இல்லத்தில் 30 நிமிடத்திற்கும் மேலாக சந்திப்பு நீடித்தது. எல்லையில் உள்ள சூழல், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்து பிரதமர் மோடியிடம் ராணுவ தளபதி விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை முறியடித்ததாக இந்தியா அறிவித்த பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.