பிரதமர் மோடியின் மேடைக்கு அருகே பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பரபரப்பு

13 hours ago 2


அமராவதி: ஆந்திர மாநில தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அமராவதி வெலகபூடி பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டு தலைநகருக்காக ரூ.49 ஆயிரம் கோடியில் 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடியின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே பகுதியில் (சுமார் 3 கி.மீ தொலைவில்) பிரபல தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பைப்புகளில் திடீரென தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்த விபத்தால் உயிரிழப்போ, பொருள் சேதம் குறித்தோ தகவல்கள் இல்லை. இந்த தீ விபத்து பிரதமரின் நிகழ்ச்சிக்கு அருகில் நடந்ததால், அப்பகுதியில் கூடியிருந்த மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. பிரதமரின் வருகை மற்றும் பொதுக்கூட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில், இந்த தீ விபத்து சம்பவம் கூடுதல் கவனத்தைப் பெற்றது. பிரதமர் மோடி மாலை 3:20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் தலைமை செயலகத்திற்கு அருகே தரையிறங்கி, அங்கிருந்து பேரணியுடன் நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு சென்றார்.

பிரதமர் கலந்து கொண்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தை பாதுகாப்பு குறைபாடு என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகமோ, ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து இந்த தீ விபத்து குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் மோடியின் மேடைக்கு அருகே பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article