சென்னை: ஒன்றிய பாஜ அரசால் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடியை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தங்கபாலு, பொன்குமார், மநீம பொது செயலாளர் அருணாசலம், கருணாஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ அசன் மவுலானா, துணை தலைவர் கோபண்ணா, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், ஹசினா சயத், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், காண்டீபன், பி.வி.தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லி பாபு, அடையாறு துரை, சிவராஜசேகர், ஓபிசி பிரிவு துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
தற்போது ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதாவில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. இது முற்றிலும் அரசியல் சட்டத்துக்கு எதிராக அமைந்து உள்ளது. உதாரணமாக முன்பு மதரசாக்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்க முடியும். இதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்தது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்த சட்டம் மூலம் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வழங்க முடியும்.
இதே போல வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்து கோவில் அறங்காவலர்களாக இஸ்லாமியர்களை நியமிக்க முடியுமா? ஒரு மதத்தினர் வழிபாடு, சொத்துக்கள், சட்டங்களில் யாரும் தலையிடக்கூடாது. இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்தது போல வருங்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தொடங்கி விடுவார்கள். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
The post பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை பங்கேற்பு appeared first on Dinakaran.