பிரதமர் மோடி உலகெங்கும் திருக்குறளை பரப்பி வருகிறார் - மத்திய மந்திரி எல்.முருகன்

3 months ago 10

வாரணாசி,

வாரணாசியில் நேற்று நடைபெற்ற 3-வது காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமரின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்கின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகள் இந்த சங்கமம் இங்கே நடந்து இருக்கிறது. காசியும், ராமேசுவரமும் மிக முக்கியமான தலங்கள். எப்படி நாம் காசிக்கு வருகிறோமோ, அதேபோல காசியில் இருந்து மக்கள் ராமேசுவரம் செல்கிறார்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகள் ராமாயணத்தில் இடம் பிடித்துள்ளன. அதேபோல மகாபாரதத்திலும் இடம் பிடித்திருக்கிறது.

சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் திணை காசியை பற்றி எடுத்துரைத்து இருக்கிறது. திருநாவுக்கரசர் காசியை போற்றி இருக்கிறார். கலாசாரத்திலும் இது எதிரொலிக்கிறது. தென்காசியில், சிவகாசியில் என்று தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது.

உலகில் பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளை பெருமைப்படுத்தி வருகிறார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உலகெங்கும் திருவள்ளுவருக்கு கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கலாசார மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஐ.நா சபையில் கூட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அவர் தமிழில் பேசினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே பிரதமருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article