
சென்னை,
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், 'யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது' என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"மாநிலத்திற்கான நிதியை கேட்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாங்கள் ஈ.டி.க்கும்(அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.
எங்களை மிரட்டப் பார்த்தார்கள். மிரட்டி அடிபணிய வைக்கும் அளவிற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது. பெரியார் கொள்கைகளை பின்பற்றி சுயமரியாதையோடு இயங்கும் கட்சி. தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்."
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.