நாகப்பட்டினம்: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகப்பட்டினத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டலுக்கான செல்போன் அழைப்பு வந்தது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து நாகப்பட்டினத்தில் செயல்படும் மத்திய உளவு பிரிவு மூலம் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்ெகாண்டனர். அதில், பிரதமர் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ராமநாயகன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று கணேஷ்குமாரை பிடித்து வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அங்கு நடத்திய விசாரணையில், கணேஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும், அவரது மனைவி குழந்தையுடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றதும், இதனால் அவர் தனியாக வசித்து வந்ததும், மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கணேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
The post பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகை வாலிபர் கைது appeared first on Dinakaran.