சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, 2029ம் ஆண்டு வரை கூடுதலாக 2 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் 2024-25ம் நிதியாண்டில் மட்டும் 68 ஆயிரத்து 569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு ஊரக வளர்ச்சி இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். அதில் திட்டத்திற்கு மொத்தமாக ரூ.836.81 கோடி செலவாகிறது. அதில் ஒன்றிய அரசு ரூ.502.09 கோடியை வழங்கும் நிலையில் மீதமுள்ள 334.72 கோடி தொகையை மாநில அரசு வழங்க வேண்டும். அதில் முதல் தவணையாக ஒன்றிய அரசு நிர்வாக செலவையும் சேர்த்து ரூ.125.52 கோடி ஒதுக்க வேண்டும்.
தமிழக அரசின் பங்காக இந்த ஆண்டுக்கு ரூ.83.68 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இந்த தொகையை தற்போது அரசின் பொது கணக்கில் உள்ள தொகையில் இருந்து சரி கட்டலாம். எனவே ஒன்றிய அரசின் பங்கான ரூ.314.13 கோடியில் இருந்து ரூ.125.52 கோடியையும், மாநில அரசின் பங்கான 209.52 கோடியில் இருந்து ரூ.83.68 கோடியையும் சேர்த்து ரூ.209.20 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதை ஏற்று தமிழக அரசு ரூ.209.20 கோடியை முதல் தவணையாக ஒதுக்கி உத்தரவிடுகிறது.
The post பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.209.20 கோடி தொகை ஒதுக்கீடு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.