புதுடெல்லி: பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் திட்டம் தொடர்பாக திமுக எம்பி.கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பியிருந்த கேள்வியில், “ஆத்ம நிர்பார் திட்டம் துவங்கியதில் இருந்து அரசு ஒதுக்கிய நிதியின் விவரங்களை மாநில வாரியாக தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக எவ்வளவு, தமிழ்நாட்டில் ஆரம்ப கடன் தொகை ரூ.10,000 சரியான நேரத்தில் திருப்பி செலுத்திய பிறகு, ரூ.20,000 மற்றும் அதற்கு மேற்பட்ட ரூ.50,000 கடன்களை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை ஒன்றிய அரசு தொகுத்துள்ளதா?.
அப்படியானால் மாவட்ட வாரியாக அதன் விவரங்களை தெரிவியுங்கள். மேலும் மோசடி மற்றும் தகுதியற்ற பயனாளிகள் இத்திட்டத்தை அணுகுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையமைச்சர் தோகன் சாகு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “ பிரதமர் சுவநிதி திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 68.02 லட்சம். இவர்களில் தமிழ்நாட்டில் 3.99 லட்சம் பயனாளிகள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 429 பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 8966 பேர் பயன் பெற்றுள்ளனர். இதேபோன்று 30.01.2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில், சுமார் 2.28 லட்சம் பயனாளிகள் முதல் தவணை கடனை திருப்பி செலுத்தியுள்ளனர். அவர்களில் 1.37 லட்சம் பயனாளிகள் 2வது தவணை கடனை பெற்றுள்ளனர். மேலும் 45,363 பயனாளிகள் 2வது தவணை கடனை திருப்பி செலுத்தியுள்ளனர்.
இவர்களில் 26,955 பயனாளிகள் 3வது தவணை கடனை பெற்றுள்ளனர். மோசடியான மற்றும் தகுதியற்ற பயனாளிகள் இந்த திட்ட சலுகைகளை அணுகுவதைத் தடுக்க ஒரு முழுமையான ஐடி போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வதற்காக, சரிபார்ப்புக்குப் பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் விற்பனை சான்றிதழ் அல்லது பரிந்துரை கடிதம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன்களை அனுமதிப்பதற்கு முன்பு பெறப்பட்ட விண்ணப்பங்களையும் ஆய்வு செய்கின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post பிரதமரின் ஆத்ம நிர்பார் திட்டத்தில் தமிழ்நாட்டில் வியாபாரிகள் பெற்ற நிதி விவரங்கள் என்ன ? திமுக எம்பி கனிமொழி கேள்வி appeared first on Dinakaran.