நாகை: அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2019 வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 146 வீடுகள் கட்டாமலேயே வீடுகள் கட்டியதாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 2016 முதல் 2019 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத காலக்கட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
ஒரு இடத்தின் பட்டாவில் குடும்பத்தில் உள்ள 2 மற்றும் 3 பேருக்கு மேற்பட்டவர்களின் பெயர்களில் வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு மட்டும் வீடு கட்டுவதற்கான நிதி மற்றும் இரும்பு கம்பிகள், சிமென்ட் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் பெயரில் நிதி மற்றும் சிமென்ட், கம்பிகள் கொடுக்கப்பட்டதாகவும், 146 வீடுகள் கட்டாமலேயே வீடு கட்டப்பட்டதாகவும் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் சுருட்டியதும், பயனாளிகளின் பெயரில் அதிகாரிகள் வீடுகளுக்கான தொகை மற்றும் பொருட்களை எடுத்து கொண்டு முறைகேடுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் தேவூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பழனியப்பன், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை வீடு மற்றும் ஒன்றிய அரசின் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2017-2028ம் ஆண்டு எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு தமிழ்நாடு அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பற்றி மட்டுமே பதில் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாகை கலெக்டராக இருந்த பிரவின் நாயர், இது பற்றி உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த அதிகாரிகள் அறிக்கையில் முறைகேடு நடைபெற்றதை உறுதி செய்தனர். இதையடுத்து கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வெற்றிவேல், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோரை அப்போதைய நாகை கலெக்டர் பிரவின்நாயர் சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் பால ரவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவும், மயிலாடுதுறை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொண்ட குழுவும் ஒருங்கிணைந்து கீழ்வேளூர், ஆதமங்கலம், கோயில்கண்ணாப்பூர், கொடியலத்தூர், தெற்குபனையூர், பட்டமங்கலம் ஊராட்சிகளில் புகார் எழுந்துள்ள 146 வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2016 முதல் 2019 வரை பணியில் இருந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்கள், ஓவர்சியர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது பிரதம மந்திரி திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிதி மற்றும் கட்டுமான பொருட்கள் பெறப்பட்டவர்கள் கூரை வீடுகளில் வசிப்பதும், அவர்கள் தங்களுக்கு தொகை எதுவும் வங்கியில் வரவு வைக்கப்படவில்லை என்று வங்கி பாஸ் புத்தகங்களை காண்பித்தார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீட்டை இந்த கால கட்டத்தில் கட்டியதாக அதிகாரிகள் காண்பித்ததும் தெரிய வந்துள்ளது.
The post பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் 146 வீடுகள் கட்டாமலேயே பல கோடி ரூபாய் மோசடி: 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை appeared first on Dinakaran.