பிரச்னைகளை விலக்கும் விஸ்வரூப ராமதூதன்

14 hours ago 1

(அனுமன் ஜெயந்தி – 30.12.2024)

சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி மிகவும் பிரபலம். அதுமட்டுமா! கேட்டதை கொடுக்கும் கொடை வள்ளல். இந்த வருட அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அனுமனை துதித்துக்கொண்டே… இந்த தொகுப்பைக் காணலாம். நங்கநல்லூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் நிர்மாண வேலை நடைபெற்று வந்த நேரம். பணிகள் என்ன காரணத்தாலோ, மிகவும் தாமதமாக நகர்ந்தன. எதிர்பார்த்தபடி பணமும் வந்து சேரவில்லை. மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது. செய்வது அறியாது குழம்பினேன். இந்த நேரத்தில், எங்களுக்கு மிகவும் உறுதுணையாக நின்ற உள்ளூரைச் சேர்ந்த பரம ஆஸ்திக அன்பர் வெங்கட்ராம ஐயர் என்னிடம் வந்து, ‘‘அண்ணா! ஒரு நல்ல செய்தியை சொல்லத்தான் இப்ப வந்துருக்கேன். நம்மூர் உத்தர குருவாயூரப்பன் கோயிலுக்கு கேரளாவிலேர்ந்து குருவாயூர் சங்கரன் நம்பூதிரிங்கற பெரியவர், ‘அஷ்டமங்கள தேவபிரஸ்னம் பார்க்க வந்திருக்காராம். இன்னிக்கும் பிரஸ்னம் பார்க்கறாராம்… அங்க முடிஞ்சதும் நாமும் அவரை அழைத்து வந்து, ஒரு தேவபிரஸ்னம் பார்க்கலாமே…’’ என்று சொன்னார். எனக்கும் அது சரியாகப்பட்டது. ஒப்புக் கொண்டேன்.

நானும், வெங்கட்ராம ஐயரும், சங்கரன் நம்பூதிரி தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, விஷயத்தைச் சொன்னோம். உத்தர குருவாயூரப்பன் கோயில் பிரஸ்னம் முடிந்ததும், வந்து பார்ப்பதாகச் சொன்னார்.
அதன்படி, மூன்றாவது நாள் எனது இல்லத்துக்கு வந்தார் சங்கரன் நம்பூதிரி. முறைப்படி அஷ்டமங்கள தேவபிரஸ்னம் ஆரம்பமானது. கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடப்பதற்கான காரணங்கள், கோயிலுள்ள சர்ப்பதோஷம் முதலியவை குறித்து விவரமாகக் கூறிவிட்டு, தோஷநிவர்த்திக்கான பரிகாரங்களையும் தெரிவித்தார். அனைத்தையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டேன். இந்த நேரத்தில் தனது ஆசனப் பலகையைவிட்டு எழுந்த நம்பூதிரி, ‘‘கொஞ்சம் நீங்க இப்படி தனியா வரீங்களா?’’ என்று, அருகிலிருந்த பூஜை அறைக்குள் என்னை அழைத்தார். குழப்பத்துடன் நான் பின் தொடர்ந்தேன்.பூஜை அறைக்குள் சென்றதும். என் கைகள் இரண்டையும் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டவர், ‘‘ரமணி அண்ணா… நீங்கள் பெரிய பாக்கியவான்! இந்த உலகத்துல யாருக்கும் கிடைக்காத பாக்கியம், உங்களுக்கு கிடைக்கப் போறதை, இந்த பிரஸ்னம் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன். இன்னொரு முக்கியமான விஷயம்… நான் இப்ப சொல்லப் போற இந்த ரகசியத்தை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது!’’ என்று கூறினார். மனசு படபடத்தது.

உடனே நம்பூதிரியின் கால்களைத் தொட்டு வணங்கி எழுந்து, ‘‘நீங்க சொல்வது புரியல. புரியும் படியா சொல்லுங்க!’’ என்றேன். அதற்கு அவர், ‘‘இது, நாலு பேருக்கு மத்தியில சொல்ற விஷயம் இல்லேங்கறதாலதான் தனியா சொல்ல வந்தேன்… கேட்டுக்கோங்க. இந்த க்ஷேத்ரத்திலே நீங்க பண்ணப் போற விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி பிரதிஷ்டை இருக்கே… அது உங்களுடைய ‘ப்ராண தியாக’ பிரதிஷ்டையா அமையும். இதுதான் ரகசியம்!’’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லி முடித்தார். ‘‘நீங்க சொல்றது முழுவதுமா எனக்கு தெளிவாகலையே!’’ என்றேன்.உடனே அவர், ‘‘ஓஹோ… முழுவதுமா மனசிலாகல்லியா… சரி, புரியும்படி சொல்றேன். அந்த அனுமன் கோயில்ல யந்திரம் வெச்சு பிரதிஷ்டை நடக்கிற அந்த நேரத்துல உங்க பிராணனை (உயிரை), தானே எடுத்துக்கிட்டு தன்னோட பிரதிஷ்டையை ஸ்வாமி நடத்திப்பார்! அதத்தான் பிரஸ்னத்துல பாத்து சொல்றேன். இப்ப புரியுதா?’’ என்று தெளிவுபடுத்தினார். எனக்குத் தலை சுற்றியது. மரண பயம் கவ்விக் கொண்டது. செய்வதறியாது விழித்தேன். கண்களில் நீர் சுரந்தது. நம்பூதிரி என்னை ஆசுவாசப்படுத்தினார். பூஜை அறையிலிருந்த ‘ஸ்ரீராம பட்டாபிஷேக’ திருவுருவப் படத்தின் முன் விழுந்து வணங்கி எழுந்த நான், கண்களில் நீர் மல்க, ‘‘ராமா… இது நியாயமா? உனக்குக் கோயில் கட்றதுக்காக இந்த ஊருக்கு வந்த எனக்கு, இப்படி ஒரு தண்டனையா? இது உனக்கே தர்மமாகுமா?’’ என்று புலம்பி அழுதேன்.

என்னை சமாதானப்படுத்திய நம்பூதிரி, ‘‘வெளியே வந்ததும், யார் கேட்டாலும் கோயில் திருப்பணி சீக்கிரம் பூர்த்தியடைய நம்பூதிரி சில மந்திரங்களை உபதேசம் செய்தார்னு மட்டும் சொல்லணும்!’’ என்ற வாக்குறுதி பெற்றுக் கொண்டு, ‘‘ரொம்ப முக்கியமா உங்க மனைவியிடம் இந்த விஷயத்தை சொல்லவே கூடாது!’’ என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டார்.கண்களைத் துடைத்துக் கொண்டேன். இருவரும் வெளியே வந்தோம். சம்பாவனை கொடுத்து நம்பூதிரியை வழியனுப்பி வைத்தோம். அன்றிரவு முழுவதும் உறக்கமில்லை. மனைவியிடம்கூட சொல்ல முடியாத அந்த ரகசியம், மனசை உறுத்திக் கொண்டிருந்தது. காலப் போக்கில் அதைச் சகஜமாக எடுத்துக் கொண்டு, ஆலயத் திருப்பணிகளில் மனதை பூரணமாக ஈடுபடுத்தினேன். 32 அடி விஸ்வரூப அனுமன் சிலை வடிக்கும் பணி முடிவுறும் தறுவாய். சிலைக்குக் கீழே ஆதார பீடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக, 15 கிலோ எடையில், பஞ்சலோகத்தால் செதுக்கப்பட்ட ‘பஞ்சமுக ஸ்ரீஅனுமன் யந்த்ரம்’ ஒன்று தயாரானது. 1992ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி காலை 7.15 மணிக்கு,யந்த்ர பிரதிஷ்டை செய்து, விஸ்வரூப சிலையைத் தூக்கி நிறுத்து
வதற்கு நல்ல நாள் குறிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக 1991ஆம் வருடம் மத்தியில் அந்த யந்த்ரத்துடன் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை புறப்பட்டோம். பதினைந்து நாட்களில், 32 க்ஷேத்திரங்கள். சிருங்கேரியில் ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு மகாசந்நிதானம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகளை தரிசித்தபோது, சாட்சாத் மாதா ஸ்ரீசாரதாம்பாளை தரிசிப்பதாக உணர்ந்தேன். அப்படி ஒரு தாய்மை உணர்வு நிரம்பிய முக விலாசம். அவர் திருக்கரங்களில் யந்த்ரத்தை சமர்ப்பித்து வணங்கி எழுந்தேன். அந்த நேரத்தில் எனக்கு நம்பூதிரி கூறிய ‘பிராணத் தியாக’ விஷயம் நினைவுக்கு வர, பரம துக்கத்துடன் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தேன். யந்த்ரத்தில் ஒவ்வோர் எழுத்தாகப் பரிசீலித்துக் கொண்டிருந்த ஸ்வாமிகள், ஒரு தாயின் கருணையோடு என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ… என்ன புரிந்து கொண்டாரோ தெரியவில்லை. உடனே தன்னிடமிருந்த பெரிய ருத்ராட்ச மாலை ஒன்றை என் கையில் கொடுத்து விட்டுச் சொன்னார்; ‘‘இந்த ருத்ராட்சத்தை போட்டுக்கோ! இது ஒரு ரட்சையாக இருந்து உன்னைக் காப்பாத்தும். எதுக்கும் கவலைப்பட வேண்டாம். எடுத்த காரியம் ஒரு தடையும் இல்லாமல் முடியும்! இதுல ஈடுபட்ட அனைவருக்கும் பகவானின் அருள் இருக்கும்!’’ ருத்ராட்சம் எனக்கு கிடைத்ததும், மனசில் ஒரு தெளிவும், தைரியமும் ஏற்பட்டது. எனக்கு! ஸ்வாமிகளிடம் பிரசாதமும், உத்தரவும் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். திருப்பதியில் யாத்திரையை முடித்துவிட்டு, நங்கநல்லூர் திரும்பினோம். அதே ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, அனுமன் யந்த்ரத்துடன் ஸ்ரீகாஞ்சியில் மகாபெரியவாளை தரிசிக்கப் புறப்பட்டோம். அப்போது பெரியவா, ஒரு நாற்காலியில் சாய்வாக அமர்ந்திருந்தார். யந்த்ரத்தை சிரமப்பட்டு வாங்கித் தன் மடி மீது வைத்துக் கொண்டவர். தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு ஒரு பெரிய மட்டை தேங்காய் ஒன்றை கொண்டு வரச் சொல்லி, யந்த்ரத்தின் மேல் வைத்து ஆசீர்வதித்துக் கொடுத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து, இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

அடியேனுக்கு அந்த நேரத்தில் நம்பூதிரி சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. தயங்கித் தயங்கி பெரியவாளிடம் அதை விவரித்தேன். கேட்டுக் கொண்டே வந்தவர், கண்களை மூடியபடி புன்முறுவல் பூத்தார். பிறகு கனமான விஷயத்தோடு, ‘‘இந்தக் கோயிலை இப்படி கட்டணும்னு யாருக்கு தோணித்து?’’ என்று கேட்டார். உடனே நான், ‘‘ஒரு டிரஸ்டுக்கு பெரியவா! ஸ்ரீமாருதி பக்த சமாஜம் டிரஸ்டை சேர்ந்தவர்கள்தான் இந்தக் கோயிலை நிர்மாணம் பண்றோம்!’’ என்று பதில் சொன்னேன். பெரியவா… கையைத் தூக்கி ஆட்டிக் கொண்டே, ‘‘இல்லே… இல்லே…. மொதல்ல யாராவது ஒருத்தருக்குத்தானே அப்படி தோணி இருக்கணும்… அப்றம்தானே டிரஸ்டெல்லாம் வருது!’’ என்றுசிரித்தபடி வினவினார்.உடனே நான் பணிவாக, ‘`உண்மைதான் பெரியவா! எனக்குத்தான் மொதல்ல அந்த எண்ணம் வந்தது!’’ என விடையளித்தேன்.

‘‘அப்படி சொல்லு… அதுதான் நியாயம்’’ என்று கூறிவிட்டு, ‘‘அது சரி… கோயில் கட்டுன்னு உனக்கு உத்தரவு போட்டுத் தோண வெச்சது யாரு…?’’ என்றொரு கேள்வியைக் கேட்டார் நடமாடும் தெய்வம். உடனே பதில் சொன்னேன்; ‘‘சாட்சாத் ராமச்சந்திர மூர்த்தியும், ஆஞ்சநேய பிரபுவும்தான் பெரியவா!’’ மகாஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ‘‘பேஷ்! அப்படி வா வழிக்கு… உன்ன கோயில் கட்டச் சொல்லிட்டு, அதுல ஜாம்ஜாம்னு ஒக்காந்துண்டு, இந்த உலகத்துல உள்ள அனைத்து ஜீவராசிகளையும், காப்பாத்தணும்னு சங்கல்பிக்கிற ஸ்ரீராமனும், அனுமனும், நீ சொல்லும் அப்படிப்பட்ட ஒரு தீங்கான காரியத்தை, தங்களுக்குக் கோயில் கட்டினவாளுக்கே பண்ணிடுவானு தோண்றதே பாபமாச்சே! எல்லாமே பரமக்ஷேமமா நடந்து. எல்லாருமே சிரஞ்சீவிகளா இருப்பா!’’ என்றார், வாத்ஸல்யத்துடன். பெரியவாளின் பேச்சைக் கேட்டதும், மனசுக்கு மிக ஆறுதலாக இருந்தது. அனைவரும் மீண்டும் பெரியவாளை வணங்கி, மகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.

1992ஆம் வருடம், பிப்ரவரி 2ஆம் தேதி, யந்த்ர பிரதிஷ்டைக்கான ஹோமங்கள் ஆரம்பமாயின. புதுக்கோட்டையைச் சேர்ந்த மந்திர சாஸ்திர வித்வான் டாக்டர் வைத்தீஸ்வர சாஸ்திரிகள் தலைமையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் அந்த பிரதிஷ்டை ஹோமங்களை நடத்தினர். அதே மாதம், 16ஆம் தேதி, காலை 7.15 மணியளவில் ஆதார பீடத்தில் யந்த்ர பிரதிஷ்டை செய்து, அதன் மேல் 32 அடி உயர விஸ்வரூப அனுமன் சிலா விக்ரகத்தை பொருத்திவிட வேண்டும். அதற்குத் தோதாக இரண்டரை அடி விட்டம், நான்கடி ஆழமுள்ள ஆதார பீட குழிக்குமேல் 90 டன் எடையுள்ள அனுமன் விக்ரகம், இரண்டு வலுவான இரும்பு ஏணிகளுக்கு மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தது. யந்த்ர பிரதிஷ்டை ஆனவுடன், அதை ஆதார பீட குழிக்குள் இறக்கி, ‘அஷ்ட பந்தன மருந்து’ சார்த்த வேண்டும்.

பிரதிஷ்டை நாளன்று காலை சரியாக 6.15 மணியாக சாலையில் மகாபூர்ணாஹூதி எல்லாம் செய்து முடித்து, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட யந்திரத்தகடை, பய பக்தியோடு ஒரு வெள்ளித் தட்டில் எடுத்து வைக்கப்பட்டது. எனக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. வெள்ளித் தட்டை, என் சிரசில் மெதுவாகத் தூக்கி வைத்தார், ஸ்ரீ வைத்தீஸ்வர சாஸ்திரிகள். மேளதாளம் முழங்க, சந்நதியை மூன்று முறை வலம் வந்தோம். பின்னர், ஆதார பீடத்தின் மேல் யந்திரத் தட்டை இறக்கி வைத்தேன். நிமிர்ந்து பார்த்தேன். 90 டன் எடையுள்ள ஸ்ரீ அனுமன் சிலை இரண்டு உயரமான இரும்பு ‘கர்டர்’களின் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தது. நேர் கீழே யந்திர பிரதிஷ்டையாக வேண்டிய ஆதார பீடம்!கிழக்கே உதித்த சூரியனை வணங்கி பிரார்த்தித்தேன். என் அருகில் எனது மனைவியும் இருந்தாள். திடீரென்று, அந்த நேரத்தில் நம்பூதிரி சொன்ன “பிராணத் தியாக பிரதிஷ்டா’’ விஷயம் நினைவுக்கு வந்து தொலைத்தது! மனதை பயம் கவ்வியது. உடல் வியர்த்தது. கண்களில் நீர் முட்டியது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு, வைத்தீஸ்வர சாஸ்திரிகளைத் தனியே அழைத்து அவரிடம், ‘‘ஸ்வாமிகளே! நீங்க மிக பெரிய சாஸ்திரிகள். எத்தனையோ யாக யக்ஞங்களெல்லாம் செய்தவர்! நெறய தேவத பிரதிஷ்டை செய்தவர். அதனால, உங்க கையாலயே இந்த யந்திர பிரதிஷ்டையும் நடக்கட்டுமே…’’ என்று நான் முடிப்பதற்குள், “சிவ… சிவ! இதெல்லாம் மகாராஜாக்கள் செய்ய வேண்டிய காரியம் ஸ்வாமி! பூர்வ ஜன்ம புண்யம். உங்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது! உங்க கையாலயே யந்திர பிரதிஷ்டை நடக்கட்டும். அதுதான் சிலாக்கியம்!’’ என்று நாசூக்காக மறுத்துவிட்டார். இதைக் கவனித்த என் மனைவி, அருகில் வந்தாள். என்னிடம்,

‘‘எதுக்காக அந்த வயசானவரை உள்ள இறங்கி யந்திர பிரதிஷ்டை செய்ய சொல்றீங்க? நீங்கதானே சங்கல்பம் செய்து இருக்கீங்க.. அதனால நீங்கதானே பண்ணியாகணும்?’’ என்று நியாயத்தை
எடுத்துச் சொன்னாள். அப்போது ஒரு முடிவுக்கு வந்தேன். நம்பூதிரி சொன்ன விஷயத்தை இனியும் மனைவியிடம் மறைக்கக் கூடாது என்று தீர்மானித்து, உடனேயே அவள் கைகளைப் பிடித்தபடி, நம்பூதிரி சொன்ன பிரஸ்ன விவரங்களைத் தெளிவாக விவரித்தேன். அதைக் கேட்டு, அவள் துளியும் கலங்கவில்லை; பதற்றப்படவில்லை. மாறாக,‘‘இதோ பாருங்க… இந்த ஜன்மாவில் ஸ்வாமி நமக்குக் கொடுத்திருக்கிற பெரிய பாக்கியம் இந்த பிரதிஷ்டை. இதை நீங்கதான் செய்யணும்! நான் துளியும் கலங்கலை. இந்த உலகத்துல ஒரு நல்ல கார்யம் பண்ணும்போது, அப்படித்தான் நடக்கணும்னு விதி இருந்தா, அப்படியே நடக்கட்டும்! நான் துளியும் பயப்படல!’’ என்று தைரியமூட்டினாள் (தற்போது என் மனைவி உயிருடன் இல்லை). அதைக் கேட்டதும் மனதில் புதிய உத்வேகம் உண்டானது.

அப்போது மணி 7.05. யந்திரத்தோடு நான்கடி ஆழ ஆதார பீடத்தினுள் இறங்கினேன். உரிய மந்திரங்களைச் சொல்லி ‘யந்திர பிரதிஷ்டை’ செய்தேன். மனதில் அப்போது எந்த வித பாதிப்பும் இல்லை. யந்திர வடிவான அனுமனிடம், ‘‘இந்த உலகிலுள்ள சகல ஜீவராசிகளும் இன்பமாக இருக்கணும்! எல்லோருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை என அனைத்தும் கிடைக்கணும்!’’ என்ற பிரார்த்தனைகளை சமர்ப்பித்துவிட்டு, மேலேறி வந்துவிட்டேன். ஸ்வாமி என்னைக் காப்பாற்றிவிட்டார்!பிறகு, 1995ஆம் வருடம் மே மாதம், 19ஆம் தேதி, மகாகும்பாபிஷேகம் நடந்தது! அதையும் தாண்டி, 12 வருடங்களுக்குப் பிறகு, கடந்த 28.06.2007 அன்று நடைபெற்ற புனருத்தாரண மகாகும் பாபிஷேகத்தையும் நடத்தி வைத்து, தரிசிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது!மகான்களின் ஆசிகளாலும், நங்கநல்லூர் ‘ஆதிவ்யாதிஹர’ ஸ்ரீபக்த ஆஞ்சநேய ஸ்வாமியின் அருளாலும் மட்டுமே நான் ‘பிரஸ்ன’ வாக்கையும் மீறி இதுவரை உயிருடன் இருந்து வருகிறேன்!

The post பிரச்னைகளை விலக்கும் விஸ்வரூப ராமதூதன் appeared first on Dinakaran.

Read Entire Article