வாரம் ஒரு முறை. முடியவில்லையா? மாதமொருமுறை, நீங்கள் கட்டாயம் ஒரு விரதம் இருக்க வேண்டும். அமாவாசைவிரதம், பவுர்ணமி விரதம், கிருத்திகை விரதம், ஏகாதசி விரதம், சஷ்டி விரதம், சதுர்த்தி விரதம், பிரதோஷ விரதம், இதெல்லாம் அவசியம் இருக்க வேண்டிய விரதம் தான். முக்கிய விரதம்தான். நல்ல பலன்களும் புண்ணியமும் தரும் விரதம்தான். ஆட்சேபனை இல்லை. ஆனால், நான் சொல்லவந்தது, மிக முக்கியமான, உங்கள் சக்தியை மேம்படுத்தும்விரதம். இந்த விரதத்துக்கு இணையான ஒரு விரதம் இல்லை. பல மகான்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்துக் காட்டியிருக்கிறார்கள்.
என்ன விரதம்?
உண்ணாவிரதமா? அல்ல.. எதையும் சொல்லாவிரதம், சும்மா இருக்கும் விரதம், பேசாவிரதம், மௌன விரதம். மென்று சாப்பிடும் வாய்க்கு, ஒரு நாள் ஓய்வு தருவதைப் போல, சதா பேசும், அதே வாய்க்கு ஒருநாள், வேண்டாம், ஒரு நாளில் ஒரு சில மணி நேரம் ஓய்வு தருவதால், கிடைக்கும் உயர்வும், உடல் சக்தியும், மன சக்தியும், அமைதியும், ஆற்றலும் சொல்லில் அடங்காதது. 1899ல் குடந்தையில் சித்தியடைந்த மகான் மௌன குரு சுவாமிகள் என்ற மகாதவஞானி, மௌனமாக இருந்தே, அடியார்களுக்கு அருள்பாலித்தவர்.அருணகிரிநாதர், திருப்புகழ் பாடினார். ஏராளமாகப் பாடியுள்ளார். கந்தர் அந்தாதி பாடினார். கந்தர் அலங்காரம் பாடினார். ஆனால், அவர் பாடிய
“கந்தரனுபூதி’’ அற்புதமானது. அதில்தான், ‘‘குருவாய் வருவாய் அருள்வாய் முருகா” என்று வருகிறது.ஒருமுறை, மகான் ஒருவர், ஒருவருக்கு செல்வம் வர கந்தரனுபூதி பாராயணம் செய்யச் சொன்னாராம். அதில் அருட் செல்வமும் பொருட்செல்வமும் தரும் விஷயங்கள் உண்டு. பூதி என்றாலே செல்வம் தானே. விபூதி என்றாலே செல்வம்தான். ஒருவர் கேட்டாராம். ‘‘ஞானம் வரும் சரி, பொருட்செல்வம் எப்படி வரும்?’’ என்று கேட்க, மகான் சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
‘‘குருவாய் அருள்வாய் முருகா’’
என்றால் ஞான செல்வம் வரும். ‘‘வருவாய் (revenue) அருள்வாய் முருகா’’ என்றால் வருவாய் (பணம்) வராமலா போகும்? இரண்டும் வருவதற்கு குருவாய் வருவாய் அருள்வாய் என்று சொல்ல வேண்டும் என்று நயமாகச் சொன்னாராம். அந்த அருணகிரிநாதர் ஒரு பாடலில்
சொல்கிறார்;
“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான்முருகன் பிறவான் இறவான்
“சும்மா மாயிரு சொல்லற” என்றலும்
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே’’
சும்மா இரு. இதுதான் முக்கியம். மௌனம் முக்கியம். கண்ணதாசன்
அழகாகச் சொல்லுவார்;
“சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை”.
ஆம். மௌனத்தைக் கவனித்தால் அது ஏராளமாகப் பேசும் என்பார்கள். மௌனத்தை silence of Sound என்பார்கள். இன்று கல்லால் அடித்துக் காயப் படுத்துவத்தைவிட, சொல்லால் அடிக்கப்படும் காயங்களே அதிகம். கல்லால் பட்ட காயம் ஆறும். சொல்லால் பட்ட காயம் ஆறாது. நாவினால் சுட்ட வடு என்றைக்கும் இருக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொன்னார்கள். வலி மிகுந்த பேச்சைவிட மௌனம் சிறந்தது. நாம் சிலரோடு தேவையில்லாது வாதம் செய்கிறோம். வார்த்தை ஆடுகிறோம். என்ன பலன்?
நாம் மௌனமாக, பதில் பேசாது இருப்பதால், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றும், தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் சிலர் நினைக்கலாம். அதற்காகவே குரலை உயர்த்தி சிலர் வாதம் புரிவார்கள். ஒரு அறிஞர் சொன்னார்;‘‘இதோ பார், நான் என் வாயை மூடிக் கொண்டிருப்பதாலும், நீ உரக்கப் பேசுவதாலும் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறாய். அது தவறு, நான் வாய் மூடி அகல் வது உன்னிடம் வாதம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லைஎன்பதைக் காட்டுமே தவிர, நான் பேச முடியாமல் தோற்றதாக அர்த்தம் ஆகாது.’’ அதைப் போலவே, ஒருவன் கேட்கும் கேள்விக்கு மௌனமாக இருப்பதால் பதில் சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள். மௌனம் ஆயிரம் பதில்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒருவர்பக்குவமானவர் அனுபவம் உடையவர் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? அதற்கு ஒரு அளவு உண்டு.அவர் உணராதவர்களிடமும்,புரிந்து கொள்ள முடியாதவர்களிடமும், விரும்பாதவர்களிடமும், வீண் வாதம் செய்பவர்களிடமும், தன் கருத்துசரியானது என்று நிரூபிக்க முயல மாட்டார். மௌனமாக சிரித்துக் கொண்டே கடந்துவிடுவார்.அந்த நேரத்தில் மௌனம் சக்தி வாய்ந்த பதில் என்று உணர்வார். பெரிய சாதனையாளர்கள், பெரிய காரியங்களை செய்பவர்களை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். சத்தமாகப் பேச மாட்டார்கள். ஆனால், அவர்கள் செய்யும் செயல் சத்தமாகப் பேசும். இதையெல்லாம் தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள், நம் சக்தி வீணாகாமல் தடுக்கவும், செயல்திறன் அதிகரிக்கவும், குறிப்பாக வழிபாடு பூஜையின் பயன் முழுமையாகக் கிடைக்கவும், ஒரு நாள் மௌன விரதம் இருக்கச் சொன்னார்கள்.
மௌன விரதம் இருந்து பழகிவிட்டால், அது பற்பல காரியங்களுக்கான சக்தியை மனதிற்கும் உடலுக்கும் கொடுத்துவிடும் என்பது உண்மை.மௌன விரதம் என்பது வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாதிருப்பதே என பதஞ்சலி முனிவர் தனது “யோக சூத்திரம்’’ எனும் நூலில் விளக்கியுள்ளார். இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கலாம்.மௌன விரதம் இருப்பதன் மூலம் எப்போதும் மனம் அலைபாயாமல் இயல்பாக இருக்கும். மௌனத் தவமிருந்து சித்திகள் பல பெறலாம் என பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். பதஞ்சலி முனிவரின் யோகா எனும் இந்த தத்துவத்தை இந்து சமயம், சமண சமயம், பௌத்த சமயம் மற்றும் பல சமயங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. மௌன விரதத்தின் அவசியத்தையும் அதன் பெருமைகளையும் தங்கள் வேத நூல்களில் வலியுறுத்தியுள்ளனர். வாய் தானே பேசக் கூடாது என எழுதிக் காட்டுவதும் சைகையில் பேசுவதும் சரியல்ல. அதில் மௌன விரத நிறைவு ஏற்படாது. மௌனம் என்பது ஆழ்நிலையில் அமைதியாய் இருத்தல். மோனநிலை என்பார்கள். ஆனந்தம் பிறக்கும் நிலை இங்குதான் உருவாகிறது.பகவான் ரமணர், மோனத்தவமிருந்தது அனைவரும் அறிந்ததே. பால் பிரண்டன் என்ற மேலை நாட்டு மெய்யியல் அறிஞர், தனது நூலில், ரமண மகரிஷியின் ஆழ்ந்த மௌனத்தைப் போற்றி எழுதி இருக்கிறார். மனஅமைதிக்கு தேவை மகிழ்ச்சி. அது மௌன தவத்தால் மட்டுமே கிட்டும். பல செயல் களைப் பேசி சாதிப்பதைவிட, மௌன விரதத்தால் சாதிப்பது எளிது.சிறப்பு வாய்ந்த மௌன விரதத்தை மாதம் ஒரு முறையாவது கடைப் பிடித்தால், உடலுக்கும் நல்லது மனதுக்கும் நல்லது.
The post பிரச்னைகளிலிருந்து விடுபடவும் ஆற்றலை அதிகரிக்கவும் எளிய வழி இதுதான் appeared first on Dinakaran.