முத்துக்கள் முப்பது – மகத்தான பலன்களை வாரி வழங்கும் மகா சிவராத்திரி

2 hours ago 1

மகா சிவராத்திரி (26.2.2025 )

1. முன்னுரை

இந்து சமய பண்டிகைகளில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு. சில பண்டிகைகள் பகலில் இருக்க வேண்டும். உதாரணமாக ராமநவமி போன்ற பண்டிகைகள் பகலில் கொண்டாடுவார்கள். சில பண்டிகைகள் இரவில் கொண்டாட வேண்டிய பண்டிகைகள். கோகுலாஷ்டமி இரவில் விஷேசம். சில பண்டிகைகளின் பெயரே ராத்திரி என்ற பெயரோடு இணைந்திருக்கும். உதாரணமாக நவராத்திரி, சிவராத்திரி. அம்பிகைக்கு உரிய பண்டிகை நவராத்திரி. சிவனுக்கு உரிய பண்டிகை சிவராத்திரி. நவராத்திரி பண்டிகை தக்ஷிணாயன காலத்திலும், சிவராத்திரி பண்டிகை உத்தராயண காலத்திலும் வருகின்றது. சிவராத்திரி பண்டிகையின் பெருமையை இந்த முத்துக்கள் முப்பது தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2. மாசியின் பெருமை

மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வருவதால் மாசி மாதம் பெருமை மிகுந்த மாதமாக இருக்கிறது. எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று போற்றப்படுகிறது. மாசி மாதம் மன
வலிமை தரக்கூடிய மாதம். மகத்துவம் நிறைந்த மாதம். இந்த மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால், கணவனின் நலனுக்காக பெண்கள் மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு. மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி மிகமிக விசேஷம்.

சைவத்துக்கு மட்டுமல்லாமல் வைணவத்திலும் மாசி மாதம் ஏற்றம் பெற்றது. ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார். ஆச்சார்யர்கள் திருக்கச்சி நம்பிகளும் மணக்கால் நம்பிகளும் மாசி மாதத்தில்தான் அவதரித்தார்கள். பல ஆலயங்களில் மாசி மாதங்களில் விசேஷ வைபவங்கள் நடைபெறும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தெப்ப உற்சவமும் திருக்குறுங்குடி அழகிய நம்பிகள் தெப்ப உற்சவமும் திருக்கண்ணபுரம் பிரமோற்ச வமும் மாசி மாதத்தில்தான் நடைபெறும்

3. சிவராத்திரி

மாசி மாதம் 11வது மாதம். 11வது ராசியான கும்பராசியில் சூரியன் நுழையும் மாதம் மாசி மாதம். இதை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்வார்கள். இந்த மாதத்தில் சூரியன் சந்திரன் இணைவும், எதிரெதிர் ராசியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும், இரண்டு முக்கியமான விரத தினங்களாக இருக்கும். சூரியன் கும்பத்திலும் சந்திரன் சிம்மத்திலும் (மக நட்சத்திரத்தில்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பௌர்ணமி மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது.

அதே சந்திரன் கும்பராசியில் சூரியனோடு இணையும் அமாவாசை நிகழ்வின் முதல் நாள் அதாவது 14-வது திதி மகா சிவராத்திரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை 14ஆம் நாள் மாத சிவராத்திரி என்று அனுஷ்டிக்கிறார்கள். மாசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை 14ஆம் நாளான சதுர்த்தசி திதியை மகா சிவராத்திரி நாளாக அனுஷ்டிக்கிறார்கள்.

4. இந்த ஆண்டு சிவராத்திரி

இந்த ஆண்டு மகாசிவராத்திரி 26-ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. காலையில் திருவோண நட்சத்திரம் இருக்கின்றது. மாலை 5:00 மணி அளவில் அவிட்ட நட்சத்திரம் வந்து விடுகிறது. அதைப்போலவே காலை 10:00 மணி வரை திரயோதசி திதியும் அதற்குப் பிறகு சதுர்த்தசி திதியும் வந்து விடுகிறது. 26 ஆம் தேதி இரவு மகா சிவராத்திரி தினமாக எல்லா சிவாலயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

5. சிவராத்திரி என்றால் என்ன?

சிவராத்திரி என்றால் சிவனுக்குரிய ராத்திரி அல்லது சிவனை வழிபட வேண்டிய ராத்திரி என்று எடுத்துக் கொள்ளலாம். அஞ்ஞானமாகிய இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு ஆன்மாக்களை அழைத்துச் செல்லும் அற்புத நாள்தான் சிவராத்திரி. இரவெல்லாம் விரதமிருந்து, விடியும் போது சூரியன் என்கின்ற ஒளியை தரிசிக்கின்றோம். சிவராத்திரியில் விரதமிருந்து சிவபெருமானாகிய மகா ஒளியை தரிசிக்கின்றோம். அந்த ஒளி நம் மனதின் குழப்பத்தையும், இருட்டையும், பாவங்களையும், துன்பங்களையும் விரட்டுகிறது.

அதனால்தான் மகா சிவராத்திரி இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகிறது. தீமையை அழிப்பவரும் வாழ்க்கையை மாற்றுபவருமான சிவபெருமானை வழிபடுவதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. சிவராத்திரி பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வரும். பால்குண மாதத்தின் தேய்பிறை 14வது இரவில் கொண்டாடப்படுகிறது. இந்த இரவில், சிவ பக்தர்கள் விழித்திருந்து, சிவ நாமத்தை உச்சரித்து, பிரார்த்தனை செய்து, அவரது அருளைப்பெற பற்பல வழிபாட்டுச் சடங்குகளைச் செய்கிறார்கள்.

6. சிவராத்திரியில் என்னென்ன நடந்தது தெரியுமா?

சிவராத்திரியில் தான் முதல் முதலில் படைப்புத் தொழிலை பிரம்மா தொடங்கினார். சொர்க்கத்தின் அதிபதியான இந்திரன் சிவராத்திரியில் தான் அந்தப் பதவியை அடைந்தான். குபேரன் தவமிருந்து செல்வத்தின் அதிபதி ஆனதும் இந்த நாளில் தான். அம்பிகை தவமிருந்து சிவபெரு மானின் சரிபாதியாக இடது பாகத்தைப் பெற்றதும் இந்த நாளில் தான். மகாபாரதத்தில் அர்ஜுனன் ஒற்றைக் காலில் உக்கிரமான தவம் இயற்றி, சிவபெருமானிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதும் இந்த நாளில் தான். விண்ணில் இருந்த கங்கை பகீரதனின் முயற்சியால் மண்ணில் இறங்கிய நாளும் இந்த நாள். இப்படி பலப் பல முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சிவராத்திரியில் நடைபெற்று இருக்கின்றன.

7. எட்டு விரதங்களில் முக்கியமான விரதம்

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள். எட்டு வகை விரதங்களில் மகத்தான தலையாய விரதம் சிவராத்திரி. சிவராத்திரியில் மூன்று செய்திகள் இருக்கின்றன. ஒன்று இரவு. இன்னொன்று தேய்பிறை இரவு. மூன்றாவது தேய்பிறை சதுர்த்தசி என்பதால் அமாவாசைக்கு நெருக்கமான இரவு. (மகா சிவராத்திரி விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.) இந்த இருட்டில் இருந்து சிவமாகிய மங்கலத்தை அருட் பெரும் ஜோதியாகிய வெளிச்சத்தை நோக்கி உயிர்களின் முயற்சி நடக்கிறது.அதற்கான பிரார்த்தனை விரதம் தான் சிவராத்திரி விரதம்.

8. விடியல் தரும் ராத்திரி சிவராத்திரி

இருட்டில் இருக்கின்ற பொழுது ஏதேனும் ஒரு சிறிய வெளிச்சம் கிடைத்தாலும் அதை நோக்கி நம்முடைய சிந்தை திரும்பும். சிவராத்திரி ஆகிய அந்த இருட்டில், நாம் செய்கிற பிரார்த்தனையால், வெளிச்சமாகிய சிவனை நோக்கி சிந்தை திரும்பும். சிக்கல்கள் அகன்று ஆன்மாக்களாகிய சீவர்களுக்கு சிவமருள் என்னும் வெளிச்சம் கிடைக்கும். இந்த தத்துவத்தை நோக்கிய ஆன்மிகப்பயணம்தான் சிவராத்திரி.

இருட்டு என்பது அறியாமையைக் குறிக்கும். அஞ்ஞானத்தைக் குறிக்கும். மயக்கத்தைக் குறிக்கும். அயர்வைக் குறிக்கும். தீர்மானமில்லாத தன்மையைக் குறிக்கும். குழப்பமான சிந்தனைகளைக் குறிக்கும். தூக்கத்தைக் குறிக்கும். துக்கத்தைக் குறிக்கும். இந்த துக்கம் நீங்கவும், அயர்வு நீங்கவும், அறி யாமை அகலவும், துணிவு பிறக்கவும், தொல்லைகள் தொலையவும், நன்மைகள் விளையவும், பிரார்த்தனை செய்கின்ற ராத்திரி சிவராத்திரி.

9. மூன்று நிலைகளில் இறைவன்

இறைவன் மூன்று நிலைகளில் இருக்கிறான். இறைவன் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் இருக்கிறான். அருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான் என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். இதில் அருவுருவ நிலை இலிங்க நிலை.

மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி பதினாலாம் நாள்) இரவு பதினான்கு நாழிகை இறைவன் இலிங்கமாகத் தோன்றிய காலம். இதுவே மகா சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்தநாளில் நேரிடும் திரயோதசி சிவபெருமானுக்கு உடம்பாகவும், சதுர்த்தசி சக்தியாகவும் சிவாகமம் கூறும். சிவராத்திரி நான்கு காலங்களிலும் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் நிகழ்த்தல் வேண்டும். இவற்றை அன்புடன் நிகழ்த்துவோர் இம்மை மறுமையின்பங்களையும், முடிவில் முக்தியின்பத்தையும் பெறுவர்.

10. எப்படி விரதம் இருக்க வேண்டும்?

வைணவத்தில் ஏகாதசி விரதமும் சைவத்தில் சிவராத்திரி விரதமும் உயர்ந்தது. ஏகாதசிகளிலும் வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி வைணவர்களுக்கு உயர்ந்ததோ, அதைப்போல மாத சிவராத்திரி விரதங்களை விட, மகா சிவராத்திரி விரதம் (மாசி மகா சிவராத்திரி) உயர்ந்தது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் (உண்ணாமல்) இருக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால், இளநீர், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் எக்காரணத்தைக் கொண்டும் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

அன்று சிவ சிந்தையைத் தவிர வேறு சிந்தை இருக்கக்கூடாது.காலையில் நீராடி தூய்மையோடு சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.இந்த நாளில் விடிய விடிய உறங்காமல் சிவபுராணம் படித்தும் சிவனை வணங்கியும் வர நன்மைகள் நடைபெறும். எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும், மகாசிவராத்திரி விரதமிருக்கும் சிவனடியார்களைக் கண்டு எமன் அஞ்சுவார் என்றும் சிவபுராணம் கூறுகிறது. மகா சிவராத்திரி தினமான இன்று பஞ்சபூத தலங்களை தரிசனம் செய்யலாம்.

11. முதல் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
அபிஷேகம் – பஞ்சகவ்யம்
அலங்காரம் – வில்வம்
அர்ச்சனை – தாமரை, அலரி
நிவேதனம் – பால் அன்னம், சக்கரைப்பொங்கல்
பழம் – வில்வம்
பட்டு – செம்பட்டு
தோத்திரம் – இருக்கு வேதம், சிவபுராணம்
மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை – சாம்பிராணி, சந்தனக்கட்டை
ஒளி – புட்பதீபம்

12. இரண்டாம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – தக்ஷிணாமூர்த்தி
அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
அலங்காரம் – குருந்தை
அர்ச்சனை – துளசி
நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் – பலா
பட்டு – மஞ்சள் பட்டு
தோத்திரம் – யசுர் வேதம், கீர்த்தித் திருவகவல்
மணம் – அகில், சந்தனம்
புகை – சாம்பிராணி, குங்குமம்
ஒளி- நட்சத்திரதீபம்

13. மூன்றாம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
அபிஷேகம் – தேன், பாலோதகம்
அலங்காரம் – கிளுவை, விளா
அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம், சாதிமலர்
நிவேதனம் – எள்அன்னம்
பழம் – மாதுளம்
பட்டு – வெண்பட்டு
தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தனம்
புகை – மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐந்துமுக தீபம்

14. நான்காம் ஜாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் – கரு நொச்சி
அர்ச்சனை – நந்தியாவட்டை
நிவேதனம் – வெண்சாதம்
பழம் – நானாவித பழங்கள்
பட்டு – நீலப்பட்டு
தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் – புனுகு சேர்ந்த சந்தனம்
புகை – கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி – மூன்று முக தீபம்

15. பாரணை

சிவராத்திரி தினத்தில் மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டில் விளக்கு ஏற்றி சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்
இருக்கின்றன.திருக்கேதீச்சரப் பதிகங்களையும் திருவண்ணா மலைப் பதிகங்களையும் அவசியம் ஓத வேண்டும்.அருகில் உள்ள சிவன் கோயிலில் இரவில் நடைபெறும் அபிஷேக பூஜைகளில் கலந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே சிவ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே கண் விழித்திருக்க வேண்டும்.

சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜையின் போது சிவபுராணம் படிக்கலாம். திருவாசகம், திருவிளையாடல் புராணம், சிவபெருமான் பற்றிய கதைகள், புராணங்கள் படிப்பது சிறப்பு .சிவபெருமானின் மந்திரங்கள் தெரியாவிட்டாலும், “ஓம் நமசிவாய” என்ற எளிய சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது சிறப்பு. சிவராத்திரி விரதம் என்பது அடுத்த நாள் பாரணையில் தான் முடியும். அன்று காலையில் நீராடி திருக்கோவில் தரிசனம் செய்து வீட்டிற்கு வந்து தூய்மையான பலவிதமான காய்கறிகளுடன் உணவுகள் சமைத்து, அதை பூஜையில் வைத்து ,தூப தீபம் காட்டி, பின்னர் அடியார்களுக்கு அமுதிட்டு, நாமும் உணவருந்தி சிவராத்திரி விரதத்தை முடிக்க வேண்டும். இனி ஒவ்வொரு தலத்திலும் சிவராத்திரி வைபவம் எவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

16. சிதம்பரத்தில் சிவராத்திரி

ஆகாயத்திற்குரிய சிதம்பரம் திருத்தலமே முதன்மையானதும், பழமையானதும் ஆகும். பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம் பரத்தில் தொடங்கி காளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலம் ஸ்தலம். திருவானைக்காவல் கோவில் நீர் ஸ்தலம்,
 காலஹஸ்தி கோவில் வாயு ஸ்தலம், சிதம்பரம் கோவில் ஆகாயம் ஸ்தலம், திருவண்ணாமலை கோவில் நெருப்பு ஸ்தலம். சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழமையானது, பெருமை வாய்ந்தது. சிவபெருமான், நடராசராக, சிவகாமியம்மையுடன் வீற்றிருக்கும் ஆலயம்.

ஆகாச வடிவில், சிவன் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பரம் ஆலயத்தில் வழிபடப்படுகிறது. இங்கு இறைவன் நடராசன் என்ற பெயரிலும் அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.

17. ஆனந்த நடமாடும் நடராஜப் பெருமானுக்கு நாட்டியாஞ்சலி

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் நடராஜருக்கு 4 கால பூஜை நடைபெறும். சிவ பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் சிவகங்கை குளத்தில் நீராடி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியை வழிபடுவது வழக்கம். இரவு ஏக கால லட்சார்ச்சனை வைபவம் நடைபெறும். பக்தர்கள் நெய் விளக்கேற்றி நேர்த்திக்கடனை செலுத்துவர். சிதம்பரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த 43 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 44-வது ஆண்டின் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.இதில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்களின் நாட்டியத்தை சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையினால் இது சிறப்பு பெற்று வருகிறது. நாட்டியாஞ்சலி விழாவில் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகனி ஆட்டம், கதக் மற்றும் இதர வகை நாட்டிய கலைஞர்கள் 5 நாட்களும் சிதம்பரத்தில் தங்கி தங்கள் நாட்டிய அஞ்சலியை சிவபெருமானுக்கு செலுத்துகிறார்கள். இதில் இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்து இருப்பதால், இந்த விழா மற்ற விழாக்களில் இருந்து மாறுபட்டு சிறப்பு பெற்று வருகிறது.

18. திருவண்ணாமலையில் சிவராத்திரி

மலையே சிவன். சிவனே மலை. ‘‘வானனை, மதி சூடிய மைந்தனை,தேனனை,திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?” என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு ஸ்தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல் கின்றனர். மகா சிவராத்திரியின் போது, கோயில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வரு கிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

19. திருஆனைக்கா சிவராத்திரி

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில், நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளிலும் கோபுரங்களும், ஐந்து பிராகாரங்களும் உடையது.ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார்.

நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புலிங்கம் என வழங்கப்படுகிறது.மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெறும் ..இரவு 10 மணிக்கு மேல் முதல் ஜாமம் பூஜையும், இரவு 1 மணிக்கு மேல் 2-ம் கால பூஜையும், 3-மணிக்கு மேல் 3-ம் ஜாம பூஜையும், அபிஷேக அலங் காரங்களும் நடைபெறும். 3-ம் கால பூஜை நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவர். 4-ம் கால பூஜை அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் .முதல்கால பூஜை முடிந்த பின்பு கோயில் நவராத்திரி மண்டபத்தில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் கோயில் கொடிமர மண்டபம், மூன்றாம் பிரகார மண்டப பகுதிகளில் இரவு முழுவதும் தாங்கள் கொண்டுவந்த சிவலிங்கத்திற்கு பால், தயிர், திரவியம், சந்தனம் என பூஜைப்பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடத்தி தீப ஆரத்திகளை மேற்கொள்ளுவர்.

20. திருவாரூரில் சிவராத்திரி

திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமான பெரிய கோயில். இக்கோயில் சைவ மரபில் பெரிய கோயில் எனவும் திருமூலட்டானம் எனவும் பூங்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் ஆகும். சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலம் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். இக்கோவிலில் தான் பசுவிற்கு நீதி வழங்கினார் மனு நீதி சோழன்.

மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும் .தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு. ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். சப்த விடங்கத் தலங்களில் ஒன்று.

21. தியாகராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம்

இத்திருக்கோயிலில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். இங்கு மகா சிவராத்திரி விழா மிக அற்புதமாக நடைபெறும். பிரதோஷம் முடிந்தவுடன் கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள  கமலமுனி சித்தர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா தீபாராதனை நடைபெறுவதோடு பஞ்ச மூர்த்தி சுவாமிகள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 4 கால சிறப்பு பூஜை நடர்ந்து, தொடர்ந்து வன்மீகநாதர், மரகதலிங்கம், அசலேஸ்வரர் உள்பட அனைத்து சிவலிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் மகா தீபாராதனை நடைபெறும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நாட்டியாஞ்சலி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வர்.

22. காசியில் சிவராத்திரி

வாரணாசி இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரமாகக் கருதப்படுகிறது, மேலும் பல சிவன் கோயில்களைக் கொண்டுள்ளது. மிகவும் பிரபலமானது காசி விஸ்வநாதர் கோயில், அங்கு சிவன் பிரபஞ்சத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார். மகா சிவராத்திரியின் போது, ​​கோயில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்யவும், பிரமாண்டமான ஆரத்தியைக் காணவும் வருகிறார்கள். நீங்கள் புனித கங்கை நதியில் நீராடி மாலை கங்கை ஆரத்தியில் கலந்து கொள்ளலாம் .ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகியவை இமயமலை அடிவாரத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இரண்டு புனித நகரங்கள்.

அவை ஆசிரமங்கள் , யோகா மையங்கள் மற்றும் ஆன்மீக தியானங்களுக்கு பிரபலமானவை. மகா சிவராத்திரியின் போது, ​​நீங்கள் மானசா தேவி கோயில் மற்றும் சண்டி தேவி கோயிலுக்குச் செல்லலாம், அங்கு சிவனின் துணைவி பார்வதி சக்தியின் தெய்வமாக வணங்கப்படுகிறார். ரிஷிகேஷில், நீங்கள் நீலகண்ட மகாதேவ் கோயிலுக்குச் சென்று யோகா மற்றும் தியானம் செய்யலாம்.

23. ஜோதிர் லிங்க சிவராத்திரி

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பதா
சத்ரு புத்தி வினாஷாய தீப ஜோதி நமோஸ்துதே”
ஜோதி என்றால் ‘‘பிரகாசம்” என்றும், லிங்கம் என்றால் சிவனின் ‘‘சிலை அல்லது அடையாளம்” என்றும் பொருள் – ஜோதிர் லிங்கம் என்பது சிவபெருமானின் ஒளிரும் அடையாளம் என்றும் பொருள். ஜோதிர்லிங்க ஸ்லோகம் சௌராஷ்ட்ரே சோமநாதம்ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்ய மஹாகாலம் ஓம்காரமாமலேஸ்வரம்
பரல்யம் வைத்யநாதஞ்ச டாகினியாம் பீமசங்கரம்

சேது பந்தேது ரமேசம், நாகேசம் தருகவனே
வாரணஸ்யந்து விஸ்வேசம் த்ரயம்பகம் கௌதமீததே
ஹிமாலயேது கேதாரம், க்ரிஷ்ணேசம்ச சிவாலயே
ஏதானி ஜ்யோதிர்லிங்கனி, சாயம் ப்ராதஹ் படேன்னரஹ்
சப்த ஜென்ம கிருதம் பாபம், ஸ்மரனேன வினஷ்யதி”
இந்த ஜோதிர்லிங்க ஸ்லோகத்தை ஒருவர் தினமும் பாராயணம் செய்தால், கடந்தகால வாழ்க்கையில் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் . இந்த 12 ஜோதிலிங்கம் தலங்களிலும் மகா சிவராத்திரி விடிய விடிய நடைபெறும் ஆன்மீக அன்பர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

24. ராமேஸ்வரம் சிவராத்திரி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா கொடி யேற்றத்துடன் பிரம்மோற்சவமாகக் 12 நாள்கள் கொண்டாடப்படும். தினந்தோறும் இரவில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்..இரவு 9 மணிக்கு மேல் சுவாமி,அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.தொடர் நிகழ்வாக தேரோட்டமும், அடுத்தநாள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும்.மகா சிவராத்திரியை முன்னிட்டு பகலிலும், இரவிலும் கோவில் நடை சாத்தப்படாது.

25. உத்தரகோசமங்கை சிவராத்திரி

திரு உத்தரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீ , மங்களேஸ்வரி உடனுரை மங்கள நாதர் திருக்கோயில் மங்கலநாத சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படும். இது தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் அருகே அமைந்துள்ள 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ள சிவன் கோயில் . இந்தக் கோயிலில் மரகதத்தால் செதுக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள பழங்கால மரகத நடராஜர் சிலை உள்ளது, ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 ஜாமத்திலும் பூஜைகள் நடைபெறும். பிரபல நாட் டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகொண்டாடப்படுவது வழக்கம்.

26. பேரூர் சிவராத்திரி

காமதேனுபுரி, பட்டிப்புரி, அதிபுரி, தக்ஷ கைலாசம், தவசித்தபுரம், ஞானபுரம், கல்யாணபுரம், பிறவ நெறி தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் போற்றப்படும் பேரூர் ,கோவை நகருக்கு அருகில் உள்ளது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புராணச்சிறப்பு மிக்க ஊராகவுள்ள பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமாக போற்றப்படுகிறது.

சுவாமி பட்டீஸ்வரர் .அம்பாள் பச்சைநாயகி ( பார்வதி ) சுயம்பு லிங்கம் .இங்கு மஹாசிவராத்திரி அற்புதமாக கொண்டாடப்படும். இரவு 9 மணி முதல் 11 மணி வரை முதற்கால பூஜை, 11 மணி முதல் ஒரு மணி வரை இரண்டாம் கால பூஜை. நள்ளிரவு ஒரு மணி முதல் 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் 4.30 நான்காம் கால பூஜை நடை பெறும். ஓதுவார்கள் தேவாரம் ஓத ,நாதஸ்வர இன்னிசைமுழங்க பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

27. காஞ்சியில் சிவராத்திரி

பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம் காஞ்சிபுரம். பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள். கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள்.

அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார். சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிசேகங்கள் நடைபெறுவதில்லை. இங்கு சிவராத்திரி மகா அற்புத நிகழ்வாக நடைபெறும்.

28. தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிவராத்திரி

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கும். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வர்.

29. திருக்காளத்தியில் சிவராத்திரி

சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் ஸ்ரீ காளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திரு மேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது.

30. சிவராத்திரி விரத பலன்

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். முறைப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள். சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் அனுட்டித்தால் வாக்குபலிதமும் மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். கௌதமர். வசிட்டர், அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும் சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், மன்மதன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாகக் கூறப்படுகின்றது.

எஸ். கோகுலாச்சாரி

 

The post முத்துக்கள் முப்பது – மகத்தான பலன்களை வாரி வழங்கும் மகா சிவராத்திரி appeared first on Dinakaran.

Read Entire Article