பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் பாரம்பரியத்தை காக்கும்  தென்னை ஓலை விசிறிகள்; மதுரை புறநகரில் தயாரிப்பு பணிகள் மும்முரம்: ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடரும் ஆச்சரியம்

1 day ago 3

மதுரை: அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த பக்தர்களுக்கு நெரிசலால் ஏற்படும் புழுக்கத்தை தணிக்க பாரம்பரியம் மாறாமல் சில பக்தர்கள் தென்னை ஓலை விசிறிகளை வழங்கினர். நவீன உலகிலும் பாரம்பரியத்தை மறக்காமல் பக்தர்கள் செயல்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பண்டை காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மக்களின் கீற்று மற்றும் கிடுகு முடைவது, ஓலை பின்னுவம் தொழில் போன்றவை தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழர் நாகரிகத்தில் அனைத்து திருவிழாக்களின்போதும் முடைந்த கீற்றுகளை பயன்படுத்தி பந்தல் அமைப்பது, மேடைகள், கொட்டகைகள், வீட்டின் கூரைகள் அமைப்பது உள்ளிட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வந்துள்ளன.

தமிழக கிராமங்களில் உள்ள வீடுகளில் இன்றும் மின்சாரம் தடைபட்டு வியர்த்து கொட்டினால், தென்னை மற்றும் பனை ஓலைகளால் செய்யப்பட்ட விசிறிகளையே மக்கள் தேடி செல்கின்றனர். அவ்வாறு, மக்களின் வாழ்வியலில் ஒன்றியுள்ள தென்னை ஓலை விசிறிகள், மதுரையின் புகழ்போற்றும் சித்திரை திருவிழாவுக்காக புறநகரில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் மாவட்டத்தின் மேலூர், உசிலம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் பனை ஓலைகளால் விசிறிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது, பக்தர்களுக்கு பலர் தென்னை ஓலை விசிறிகளை வழங்கினர்.

இதுகுறித்து, தென்னை ஓலை விசிறி தயாரிப்பில் ஈடுபடும் மதுரை மேலமாத்தூரைச் சேர்ந்த தம்பதி சின்னகண்ணு (75), மல்லிகா (70) கூறியதாவது: 1980 முதல் 45 ஆண்டுகளாக தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தை முதல் வைகாசி மாதம் வரையிலான ஐந்து மாதங்களுக்கு இதுவே வாழ்வாதாரமாக உள்ளது. ஒரு நாளைக்கு 25 விசிறிகள் வரையும், கூடுதல் ஆட்களுடன் பணி புரிந்தால் 100 விசிறிகள் வரை உற்பத்தி செய்யலாம். விசிறி செய்வதற்கேற்ப சேதாரம் இல்லாத 2 மீட்டர் அளவுள்ள தென்னை ஓலைகளை மேலமாத்தூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வாங்கி வந்து, அவற்றை ஒரு நாள் முழுக்க தண்ணீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்துவோம்.

அதன்பின் ஒவ்வொரு ஓலைகளையும் நான்கு முதல் ஐந்து விசிறிகள் செய்யும் வகையில் வெட்டி எடுத்து, கைகளாலேயே பின்னி விசிறிகள் செய்வோம். விசிறிகள் தயாரானதும் அவற்றின் கைப்பிடிகளில் மரப்பிசிறுகள் இல்லாதவாறு அரிவாளால் வெட்டி சமன்படுத்தப்படும். பின், இறுதியாக 50 விசிறிகள் அடங்கிய கட்டுக்கள் மொத்தமாக விற்பனைக்கு அனுப்பப்படும்.

விலை நிர்ணயம்:
தொடக்கத்தில் ஒரு தென்னை ஓலை ரூ.10 காசுக்கு விற்பனை செய்யப்பட்டபோது விசிறியும் ரூ.15 காசு வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2005க்கு பின் ஒரு தென்னை ஓலையின் விலை உயர்ந்து ரூ.2 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், உற்பத்தி செலவும் படிப்படியாக அதிகரித்து தற்போது விசிறியின் விலை தை முதல் பங்குனி வரையிலான மூன்று மாதங்களில் ஒரு விசிறியின் விலை ரூ.2 முதல் 3க்கும், சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் ஒரு விசிறியின் விலை ரூ.4க்கும் கொள்முதல் செய்கிறோம். எங்களிடம் தை முதல் பங்குனி வரை ரூ.200க்கு ஒரு கட்டு விசிறியை வாங்கும் வியாபாரிகள் அதனை ரூ.400 வரையும், சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் ரூ.400க்கு வாங்கி அதனை ரூ.800க்கும் விற்பனை செய்கின்றனர்.

தென்னை ஓலை மட்டுமின்றி கிடுகு, கூரைகள் தயாரிக்கும் பணிகளையும் எங்கள் பகுதி கிராம மக்கள் செய்து வருகின்றனர். ஓராண்டில் ஐந்து மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் வேலை இல்லாததால் கூலி வேலை, 100 நாள் வேலை திட்டம் போன்வற்றுக்கு சென்று பிழைத்து வருகிறோம். தென்னை ஓலை விசிறி மற்றும் கிடுகு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து, தமிழக அரசு உதவிகள் செய்ய முன்வந்தால், அடுத்த தலைமுறையினரும் ஆர்வமுடன் பணிபுரிய முன்வருவர். இவ்வாறு கூறினர்.

The post பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் பாரம்பரியத்தை காக்கும்  தென்னை ஓலை விசிறிகள்; மதுரை புறநகரில் தயாரிப்பு பணிகள் மும்முரம்: ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடரும் ஆச்சரியம் appeared first on Dinakaran.

Read Entire Article