பிரசாரத்தை தொடங்கிய திமுக: வீடு வீடாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அமைச்சர்

2 weeks ago 5

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் அதனை சார்ந்த அணிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வேட்பாளருடன் சென்று பெரியார் நகரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தனர்.

நேற்று மாநகராட்சியின் வார்டு எண் 34 மற்றும் 46க்கு உட்பட்ட வாமலை வீதி, பெருமாள் வீதி, சின்னப்ப வீதி, கிராமடை 4-5 மற்றும் 7வது வீதி, லட்சுமணன் வீதி, அவ்வையார் வீதி, வேலா வீதி, தேவா வீதி ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக மக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரித்தார். மக்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்கள் எடுத்துக்கூறியும், ஈரோடு கிழக்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டப்பணிகள் குறித்தும் விளக்கமளித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது, எம்பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், திமுக மாநில நிர்வாகிகள் கந்தசாமி, சச்சிதானந்தம், குறிஞ்சி சிவக்குமார், எல்லப்பாளையம் சிவக்குமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், பழனிசாமி, செல்லப்பொன்னி, குமாரசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் முருகேசன், அக்னி சந்துரு, மணிராசு, காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்செல்வம், ஈபி ரவி, மக்கள் ராஜன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

* திமுகவுக்கு மக்கள் விடுதலை கட்சி ஆதரவு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டு முதல் திமுக கூட்டணிக்கு மக்கள் விடுதலை கட்சி தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது பிப். 5ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமாருக்கு மக்கள் விடுதலை கட்சி முழு ஆதரவு தெரிவித்து கொள்கிறது. திமுக சார்பிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள். மேலும் இந்திய தேசத்தை சூழ்ந்து இருக்கக்கூடிய மதவாத, சாதிய சனாதன மற்றும் பிற்போக்குத்தனமான ஊழல் அரசியலை ஒழிக்க தொடர்ந்து தங்கள் தலைமையிலான இந்தியா கூட்டணியை மக்கள் விடுதலை கட்சி ஏகமனதாக ஆதரிக்கிறது. இவ்வகையில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியடைய மக்கள் விடுதலை கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும், நேரடியாக களத்தில் பணியாற்றுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* நாம் தமிழர் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி (50?) போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இவர், நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 2016 ம் ஆண்டு பவானி சட்டமன்ற தொகுதியிலும், 2019ம் ஆண்டு ஈரோடு நாடளுமன்ற தொகுதியிலும், 2020ம் ஆண்டு பவானியில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலிலும், 2021ம் ஆண்டு கோபி சட்டமன்ற தொகுதியிலும், 2024ம் ஆண்டு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மாரப்பம்பாளையம். எம்.ஏ., எம்.பில். படித்துள்ளார். கணவர் பெயர் செழியன். விவசாய பணி செய்கிறார். கேபிள் டிவி ஆபரேட்டராகவும் உள்ளார்.

The post பிரசாரத்தை தொடங்கிய திமுக: வீடு வீடாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த அமைச்சர் appeared first on Dinakaran.

Read Entire Article