பிப். 4ம்தேதி ‘மினி பிரம்மோற்சவம்’ எனப்படும் ரத சப்தமி விழா: திருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி பவனி

22 hours ago 1

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மினி பிரம்மோற்சவம் என அழைக்கப்படும் ரதசப்தமி விழா வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. அன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், சுக்லபட்சம் சப்தமி திதியில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா வரும் பிப். 4ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ‘மினி பிரம்மோற்சவம்’ போன்று ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வருடாந்திர பிரம்மோற்சவத்தில் 9 நாட்களில் 16 வாகனங்களில் வரும் சுவாமி வீதிஉலாவை காண முடியாத பக்தர்கள் இந்த ஒரேநாளில் கண்டு தரிசனம் செய்வார்கள்.

அதன்படி ரதசப்தமி நாளில் அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து வடமேற்கு மாட வீதியில் காலை சூரிய உதயமாகும் 6.44 வரை காத்திருப்பார். சூரிய கதிர்கள் சுவாமி மீது பட்டவுடன் சிறப்பு ஆரத்தி காட்டப்படும். பின்னர் சுவாமி ஊர்வலமாக கோயிலுக்கு செல்வார். காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் பகல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, மாலை 4 முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபாள வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரதசப்தமியன்று அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள், 1 வயது குழந்தைகளின் பெற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிப்ரவரி 3ம்தேதி முதல் 5ம் தேதி வரை திருப்பதியில் வழங்கப்படும் நேரஒதுக்கீடு இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பை தவிர்க்க, டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே வைகுண்டம் வரிசை வளாகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.3.78 கோடி உண்டியல் காணிக்கை;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 70,610 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 17,310 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.3.78 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post பிப். 4ம்தேதி ‘மினி பிரம்மோற்சவம்’ எனப்படும் ரத சப்தமி விழா: திருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி பவனி appeared first on Dinakaran.

Read Entire Article