பின்னலூர் பகுதியில் மேம்பாலத்துடன் இணைக்கும் சாலை விரிவாக்க பணி தீவிரம்

3 hours ago 1

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் பகுதியில் விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி கும்பகோணம் அருகே சோழபுரம் வரை ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் 75% பணிகளை முடித்துள்ளது.

மேலும் சாலை அமைக்கப்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருவதோடு அல்லாமல் சேதமாகும் பகுதிகளையும் உடனுக்குடன் சீரமைத்தும் வருகிறது. பணிகள் முடிவுற்ற சில இடங்களில் பயன்பாட்டுக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.

பின்னலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் அருகே சாலை பணிகள் உயர்மட்ட பாலத்தோடு இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது சில மாதங்களில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக ஒப்பந்தம் பெற்றுள்ள படேல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயத்தில் வடலூர் அருகே மருவாய் பகுதியில் இருந்து கரைமேடு, பின்னலூர் வரை ஒப்பந்தம் பெற்ற மற்றொரு நிறுவனம் சாலை பணிகளை விரைந்து முடிக்காமல், விரிவாக்க பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க ₹923 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post பின்னலூர் பகுதியில் மேம்பாலத்துடன் இணைக்கும் சாலை விரிவாக்க பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article