ஏன் ? எதற்கு ? எப்படி ?

7 hours ago 1

?ஒரு ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை, சம்பந்தம் இருந்தால் அதன் பலன் என்ன?
– ப.ஐயப்பன், தென்காசி.

சிறந்த உடற்கட்டினைத் தரக்கூடியது இந்த கிரஹங்கள், மகர லக்னத்தில் உச்ச பலம் பெற்ற செவ்வாயினை உடையவர்கள், பலசாலிகளாக இருப்பார்கள். பெரும்பாலும் இதுபோன்ற அமைப்பினில் பிறந்தவர்களுக்கு மகர லக்னாதிபதி சனி, 10ல் உச்சம் பெற ராணுவ வீரர்களாகவும், பாதுகாப்புத்துறையில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்துவருவதன் மூலம், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். சோம்பல்தன்மை என்பது சிறிதளவும் இவர்களிடத்தில் இருக்காது. ஜோதிடர்கள்கூட செவ்வாய் மற்றும் சனியின் வலிமை பெற்றவர்களை ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வாருங்கள் என்று பரிகாரம் சொல்வார்கள். ஆஞ்சநேயர் உடல்வலிமை பெற்றவர் என்பது நாம் அறிந்ததே.

ஆக ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும், சனியும் நல்ல நிலையில் இருந்தால், அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெளிவாகிறது. செவ்வாயையும், சனியையும் அசுப கிரஹங்களாக நினைத்து அவர்களுக்கு உரிய நாட்களான செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளை நல்ல நாட்கள் இல்லை என்று தவறாக நினைத்து அந்த நாட்களை ஒதுக்குகிறோம். குறிப்பாக செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் கடுமையான நோய்களுக்காக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு நல்ல நாட்களே. ஒரு சிலர் பார்ப்பதற்கு ஒல்லியான உருவம் கொண்டிருந்தாலும் பலசாலியாக இருப்பார்கள். போன்வெயிட் அதாவது இவர்களுக்கு எலும்புகளின் எடை அதிகமாக இருக்கும். இவர்களின் ஜாதகத்திலும் செவ்வாயும், சனியும் வலிமை பெற்றிருப்பர். இதுபோன்ற உடலமைப்பினைக் கொண்டவர்களை எந்தவிதமான நோயும் அண்டாது. அதே நேரத்தில் அஜீரணக் கோளாறினைத் தருவதும் இதே செவ்வாயும், சனியும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் அல்லது சனி இருவரில் ஒருவர் ஆறில் அமர்ந்து மற்றொரு கிரஹம் கெட்டிருந்தால் அஜீரணக் கோளாறினால் அவதிப்படுவர்.

பொதுவாக செவ்வாயின் குணம் சுறுசுறுப்பு என்றால், சோம்பலைத் தருவது சனி. சோம்பல்தன்மையைத் தரும் சனியால் எப்படி உடல்நலத்தைக் காக்க முடியும் என்று தவறாக எண்ணி விடக் கூடாது. கடுமையாக உழைப்பவனுக்கு மேன்மேலும் உழைப்பையும், கஷ்டத்தையும் கொடுத்து அவனை மேன்மேலும் உழைப்பாளியாக மாற்றும் கோள் சனியே. அதற்கு நேர்மாறாக சோம்பல்தன்மையுடன் சுகமாக படுத்து உறங்குபவனுக்கு மேன்மேலும் சோம்பல் தன்மையைத் தந்து அவனை எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் தள்ளும் கிரஹமும் சனியே. அதே போல, சுறுசுறுப்பாக செயல் படுவதாக எண்ணி மிகுந்த படபடப்புடன் டென்ஷனைக் கூட்டி ரத்த அழுத்தக் குறைபாட்டினைத் தரும் கிரஹம் செவ்வாய். ஆக அளவுக்கதிகமான சுறுசுறுப்புடன் கூடிய அதிகப்படியான டென்ஷனும் இருக்கக் கூடாது, நிதானம் என்ற பெயரில் சோம்பலுடன் சும்மா உட்கார்ந்திருக்கவும் கூடாது. நிதானத்துடன் கூடிய சுறுசுறுப்பு இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனியின் கலவை முக்கியமானது. பாசிட்டிவ் எனர்ஜியும், நெகட்டிவ் எனர்ஜியும் சரியான விகிதத்தில் கலந்து இருந்தால்தான் உடலின் ஆரோக்கியம் என்பதும் சீராக இருக்கும்.

?சூரிய உதயத்திற்குள் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று சொல்வது உண்மையா?
– வண்ணை கணேசன், சென்னை.

இறைவனை தரிசிக்க கால நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், சூரிய உதயத்திற்கு முன்னதாக வரும் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடும் சமயம், இறைவனை தரிசிக்கும்போது உண்டாகும் உணர்வே தனி. அந்த நேரத்தில்தான் பெருமாள் கோயில்களில் விஸ்வரூப தரிசனம் என்ற பூஜை ஆனது நடக்கும். அதிகாலைப் பொழுதில் இறைவனை தரிசிக்கும்போது கிடைக்கும் ஆனந்தமே தனிதான். அதனை அனுபவித்துத்தான் உணரவேண்டும்.

?இறைவனை பூஜிப்பதற்கு எந்த பூக்களை பயன்படுத்தக்கூடாது?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

பரமேஸ்வரனை தாழம்பூவினாலும், துர்கையை அறுகம்புல்லாலும், சூரியனை வில்வ இலையாலும், பைரவரை மல்லிகையாலும், லட்சுமி தேவியை தும்பைப் பூவினாலும், விஷ்ணுவை ஊமத்தை மற்றும் எருக்கம்பூவினாலும், சரஸ்வதி தேவியை பவளமல்லியாலும் அர்ச்சனை செய்யக்கூடாது. ஒரு சிலர் விநாயகப் பெருமானை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், விநாயகர் சதுர்த்தி பூஜா விதானத்தில் 21 வகையான இலைகளைக் கொண்டு பூஜிக்கும்போது, த்வைமாதுராயை நம: என்ற நாமத்தைச் சொல்லி துளசி பத்ரம் சமர்ப்பயாமி என்று கொடுத்திருக்கிறார்கள். ஆக, விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யலாம் என்கிற விதிவிலக்கு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

?பிறந்த குழந்தையை எத்தனை நாட்கள் கழித்து கோயிலுக்குத் தூக்கிச் செல்லலாம்?
– அ.யாழினி பர்வதம், சென்னை.

பிறந்த குழந்தையும், அதன் தாயும், ஆண் குழந்தையானால் 30 நாட்களும், பெண் குழந்தையானால் 40 நாட்களும் முடிந்ததும் பிரசவித்த தாயையும், சேயையும் கோயில்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

?வாகனங்கள் புதிதாக வாங்கிய வுடன் திருக்கோயில் வாசலில் வைத்து அதன் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சம்பழத்தை வைத்து ஏன் நசுக்குகிறார்கள்?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

எலுமிச்சம்பழத்தை நசுக்குவது என்பது காவு கொடுப்பதற்கு சமானமாக பார்க்கப்படுகிறது. இந்த உலகத்தில் உள்ள துர்தேவதைகளுக்கு ப்ரீதியாக அவ்வாறு செய்யப்படுகிறது. இதன் மூலமாக அந்த வாகனத்தின் மீதும், வாகனத்தை இயக்குபவர் மீதும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் என்பது இருக்காது என்பதற்காகவும், ஏதேனும் தோஷம் அந்த வாகனத்தின் மீது ஏற்கெனவே வந்திருந்தாலும், அவைகளும் அதனை விட்டு விலக வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு செய்யப்படுகிறது.

?சுற்றுலா மூலம் ஆலயங்களை தரிசிப்பது முழுமையான பலனைத் தருமா?
– டி.நரசிம்மராஜ், மதுரை.

வீட்டுச் சாப்பாடுதான் நல்லது என்றாலும், ஹோட்டலில் சாப்பிட்டாலும் வயிறு நிறைகிறது அல்லவா! அதே போல, நாம் தனியாக திட்டமிட்டு தீர்த்தயாத்திரையை நிதானமாக மேற்கொண்டால்தான் நல்லது என்றாலும், இயலாதவர்கள் இது போன்ற சுற்றுலாவின் மூலமாகவும் ஆலயங்களை தரிசிக்கலாம். நிச்சயமாக அதுவும் பலன் தரும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

The post ஏன் ? எதற்கு ? எப்படி ? appeared first on Dinakaran.

Read Entire Article