‘லக்சுரி ஹோம் கட்டும் அளவுக்கு கைவண்ணம் காட்டிய கணினி ஆபரேட்டர் பற்றிதான் பரபரப்பா பேச்சு போய்க்கிட்டு இருக்கிறதாமே…’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்தில் செய் ஆறு தொகுதியில அனக்கா ஊர் ஒன்றியத்துல தற்காலிகமாக ஒரு கணினி ஆபரேட்டரை நியமிச்சிருந்தாங்க.. இவரு பணியில சேர்ந்த சில மாசத்துலயே, எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டாராம்.. அப்புறம் போக போக, டேட்டாக்களை மாற்றி சித்து வேலைகளையும் செய்ய தொடங்கியிருக்காரு..
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் 13 வகையான கணக்குகள் இருக்குதாம்.. ஒவ்வொரு கணக்கிற்கும் பண பரிவர்த்தனையில ஓடிபி அந்த ஊர் ஆட்சி தலைவரு சொன்னாதான் பண்டு டிரான்ஸ்பர் ஆகுமாம்.. ஆனா, இதுல 9வது கணக்குன்னு சொல்ற மாநில நிதிக்குழு மானியம் ஒருத்தருக்கு மட்டும் தான் ஓடிபி வருமாம்.. அதுல ஏதோ தில்லாலங்கடி வேலை செஞ்சி, இவரு நண்பரு, சொந்தக்காரரு, இவரு கணக்குன்னு பண்டு டிரான்ஸ்பர் செஞ்சிக்கிட்டாராம்.. செஞ்ச வேலைக்கு பில் வராததால, தகராறு நடந்திருக்குது..
அப்புறம் இன்னொரு ஆபரேட்டரை அழைச்சி கணினிய தட்டிப்பார்த்த போதுதான், எல்லா வேலையும் வெளிச்சத்துக்கு வந்திருக்குது.. போன ஒன்றரை வருஷத்துல, 1.27 சி வரைக்கும் ஸ்வாகா செஞ்சி, லக்சூரி ஹோம் கட்டி வர்றதும் கண்டுபிடிச்சிருக்காங்க.. கிரிவலம் மாவட்டத்துல இந்த மெகா மோசடிபற்றிதான் இப்போ பரபரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா ‘‘பிசினஸில் அதிக கவனம் செலுத்தும் மாஜி அமைச்சரை எளிதில் தொடர்புகொள்ள முடியாததால் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல நிர்வாகிகள் முடிவு செய்துட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘டெல்டாவில் இலை கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்க கூடிய நிர்வாகி ஒருவர், கட்சியில் முன்ன மாதிரி ஆர்வம் காட்டாமல் தற்போது பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறராம்.. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு பிசினஸில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியவில்லையாம்… இதை வெளியே சொல்ல முடியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களுக்குள் புலம்பி வருகிறார்களாம்…
முக்கிய நிர்வாகிக்கு எதிராக உள்ளவர்கள், இதுகுறித்து தலைமை கவனத்துக்கு கொண்டு செல்லும்படி அவர்களுக்கு குட் ஐடியா கொடுத்துள்ளனர். இதனால் அவர்களும் தலைமை கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்துள்ளனர். விரைவில் டெல்டா மாவட்டத்தில் கட்சியில் அதிரடி மாற்றம் இருக்க கூடும் என மூத்த நிர்வாகிகளுக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒழிக கோஷத்தோடு யாரும் இலைக்கட்சி தலைவரை நெருங்கிவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு அரணாக நூறு பவுன்சர்களை களம் இறங்கி இருந்தாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பசும்பொன்னில் நடந்த குருபூஜை விழாவுக்கு வரக்கூடாதுன்னு இலைக்கட்சி தலைவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிச்சாம்.. அதுவும் மம்மியின் ஆசி பெற்ற தேனிக்காரரை கரை வேட்டி கட்ட முடியாம செஞ்சதும், சின்ன மம்மிய பின்னாடியிருந்து இயக்கும் குக்கர்காரரை, இலைக்கட்சி பக்கம் திரும்பி பார்க்க கூடாத வகையில் இலைக்கட்சி தலைவர் செஞ்சதும் தான் இந்த எதிர்ப்புக்கு காரணமாம்.. எப்படியாவது இலைக்கட்சி பக்கம் கரையேறிடனுமுன்னு தேனிக்காரர் போகாத கோயில் இல்லையாம்..
இந்த வேதனை ஒருபக்கம் இருந்தாலும், வழக்கும் அவரை விடாது துரத்துதாம்.. இதனால அவரது ஆதரவாளர்கள் பிரச்னையை கிளப்ப கூடும் என்பதால், இலைக்கட்சி தலைவருக்கு 100 பவுன்சர்கள் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாம்.. இலைக்கட்சி தலைவர் வாழ்க என்ற கோஷத்துடன் யாராவது அவரை நெருங்கி, ஒழிக கோஷத்தை எழுப்பிட கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செஞ்சிருந்தாங்களாம்.. ஏர்போர்ட்டில் இருந்து இறங்கியது முதல், கமுதி பசும்பொன்னில் விழாவை முடிச்சிக்கிட்டு, மாங்கனி மாவட்டத்திற்கு கிளம்பும் வரை அந்த பவுன்சர்கள் பாதுகாப்பு அரணா இருந்தாங்களாம்..
இதற்கான ஏற்பாடுகளை தூங்கா நகரத்து மாஜியோட சன் தான் செஞ்சிருந்தாராம்.. எத்தனை பவுன்சர்கள் வந்தாலும், இலைக்கட்சியோட ஓட்டுகளை உங்களால் மொத்தமாக வாங்க முடியாதுன்னு தேனிக்காரரின் அடிப்பொடிகள் சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகரில் விடியும்போதே மாஜி மந்திரியும், மாஜி எம்எல்ஏவும் அறிக்கை போருக்கு தயாராகி விடுகிறாங்களாமே தெரியுமா…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகர் மாவட்டத்து இலைக்கட்சியில நடக்கும் அறிக்கைப்போர் தான் இப்போது ஹாட் டாபிக்.. புறநகர் மாஜி மந்திரியான உதயமானவர், துணை பொறுப்புக்கு வந்தது முதல், தினசரி காலை விடியும்போதே அவரது அறிக்கையும் தயாராகி விடுகிறதாம்.. இதைப் பார்த்து தானும் ஒரு மாநில நிர்வாகி தான் எனக்கூறிக் கொள்ளும் மாஜி எம்எல்ஏவான டாக்டர் ஒருவரும், அடிக்கடி அறிக்கை விடத் ெதாடங்கி இருக்கிறாராம்..
இப்படி இருவரும் அறிக்கை விடுவதை பார்த்து தூங்கா நகரத்து ‘பட்டி’ என முடியும் ஊரில் உள்ள மலர் கட்சியில் இருந்து இலைக்கட்சிக்கு தாவி வந்த டாக்டர் ஒருவரும், அடிக்கடி அறிக்கை விட்டு வருகிறாராம்.. தூங்கா நகரின் மற்றொரு மாஜியான தெர்மோகோல் கலகல வாய் பேச்சோடு சரி… அறிக்கையே விடுவதில்லையாம்.. மற்ற 3 பேரும் யார் பெரியவர் என்ற அடிப்படையில் அறிக்கை என்ற பேரில் ஏதாவது தினசரி கட்சியினரின் வாய்க்கு தீனி போட்டு வருகிறார்களாம்..
அதே நேரம் யார் யாரெல்லாமோ அறிக்கை விடும் அளவுக்கு கட்சி போய் விட்டதே என ரத்தத்தின் ரத்தங்கள் புலம்பி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகளை மாற்ற திட்டமிட்டு, அரசு ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்கிறதா பேச்சு அடிபடுகிறதே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழக காவல்துறையில் ஐஜி மற்றும் டிஐஜிக்கள் அளவில் மாற்றங்கள் செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறதாம்.. அதன்படி இதற்கான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகிறதாம்.. இந்த மாதத்திலேயே அதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பிக்கும்னு அதிகாரிகள் தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.. குறிப்பாக, ஆவடி மதுவிலக்கு மற்றும் சட்டம் -ஒழுங்கில் பணிபுரியும் சில ஐஜிக்கள் மாற்றம் இருக்கும்னு சொல்லிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post பிசினஸில் மும்முரமாக இறங்கியிருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.