பிஇ, பிடெக் படிப்புகளில் 2025-2026ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான கவுன்சலிங் நாளை தொடக்கம்

5 hours ago 5

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் 2025-2026ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான கவுன்சலிங் நாளை தொடங்குகிறது. முதல்நாளில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வரும் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் பங்கேற்பார்கள். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டில்( 2025-2026)சேர்ந்து படிக்க விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கான சேர்க்கை தொடர்பான அறிவிப்பு கடந்த மே 7ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஜூன் 9ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரேண்டம் எண் ஜூன் 11ம் தேதி வெளியிடப்பட்டு, சான்று சரிபார்ப்பு ஜூன் 20ம் தேதி வரை நடந்தது. பின்னர் தரவரிசைப் பட்டியல் 27ம் தேதி வெளியிடப்பட்டது.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கவுன்சலிங் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டார். ஜூலை 7ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கி நடக்கும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி, நாளை பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை கவுன்சலிங் தொடங்க உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் சுமார் 445 கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன.

இவற்றில் 2025-2026ம் கல்வி ஆண்டில் சேர ஆன்லைனில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் மட்டுமே உரிய சான்றுகளை பதிவேற்றியுள்ளனர். விண்ணப்பித்த மாணவ மாணவியரில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேருக்கு சான்று சரிபார்க்கப்பட்டுள்ளது. இதன்படி பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளவர்கள் 2,41,641 பேர். அவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2342 பேர் தொழில் கல்வியின் கீழும் தகுதி பெற்றுள்ளனர். மொத்த விண்ணப்பங்களில் 8657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தரவரிசைப் பட்டியலின்படி 144 மாணவ மாணவியர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். மீதம் உள்ள 5 பேர் இதர வாரியங்களின் கீழ் படித்தவர்கள். இவர்கள் தவிர அனைத்து பாடத்திட்டங்களின் கீழ் படித்து 200க்கு 200 கட்ஆப் பெற்றுள்ளவர்கள் 10 பேர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள ம ாணவ மாணவியருக்கான கவுன்சலிங் இணையதளம் மூலம் ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் தொடங்க உள்ளது.

பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவு மாணவ மாணவியருக்கான கவுன்சலிங்களில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கும். பொதுக் கவுன்சலிங் இணைய தளம் மூலம் பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு பிரிவுகளுக்கு 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கும். இதற்கு பிறகு துணைக் கவுன்சலிங் இணைய தளம் மூலம் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும். எஸ்சிஏ காலியிடங்கள், எஸ்சி பிரிவினருக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கும். அத்துடன் கவுன்சலிங் முடிவடைகிறது.

The post பிஇ, பிடெக் படிப்புகளில் 2025-2026ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான கவுன்சலிங் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article