பாவ விமோசனம் பெற அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டாரோ? - அமைச்சர் ரகுபதி கேள்வி

16 hours ago 1

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாட்டையால் அடித்து கொள்வது என்பது ஒருத்தருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம் ஆகும். எனவே அண்ணாமலை தான் செய்த தவறுகளுக்காக பாவ விமோசனத்திற்காக சாட்டையால் அடித்து கொண்டாரா? அல்லது அவர் ஏதேனும் ஒரு தவறு செய்ததற்காக தனக்கு தானே தண்டனை விதித்துக்கொண்டு சாட்டையால் அடித்து கொண்டாரா? என்பது தான் கேள்வி.

திமுக அரசு அவருக்கு எந்தவித பாதகமும் செய்யவில்லை. திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணிகள் அணியமாட்டேன் என அண்ணாமலை கூறியதை பற்றி கேட்கிறீர்கள். அப்படியானால் அவர் வாழ்நாள் முழுவதும் காலணிகள் அணிய முடியாது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போட்டோ எடுத்து கொண்டதை வைத்து கூற முடியாது. ஏதேனும் ஒரு தொடர்பை நிரூபியுங்கள், ஏற்றுக்கொள்கிறோம். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஞானசேகரன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். பொள்ளாச்சி சம்பவம் அரசாங்கத்தால் மறைக்கப்பட்ட வழக்கு. இது அரசாங்கத்தால் மறைக்கப்படாத வழக்கு. பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article