பாளையில் மாணவன், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு எதிரொலி; பள்ளிகளில் பலத்த சோதனைக்கு பிறகே மாணவர்கள் அனுமதி

2 days ago 4

நெல்லை: பாளை. பள்ளி வகுப்பறையில் மாணவன், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு சம்பந்தமாக இன்று பாளையில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் புத்தக பைகளில் சோதனைகள் நடந்தன. சம்பவம் நடந்த பள்ளியில் ஆசிரியர்கள் ஒரு மாணவர் விடாமல் புத்தக பைகளை சோதித்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகே ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. இந்நிலையில், 8ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையிலான பிரச்னையில் ஒரு மாணவர், புத்தக பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவரை வெட்டினார். இதை தடுக்க சென்ற வண்ணார்பேட்டையை சேர்ந்த சமூக அறிவியல் ஆசிரியை ரேவதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர். பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சக ஆசிரியர்கள், மாணவர்கள் திரண்டனர். உடனடியாக காயமடைந்த மாணவரை மீட்டு பாளை.யில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ஆசிரியையை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அரிவாளால் வெட்டிய மாணவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று போலீசாரிடம் சரணடைந்தார். பள்ளியும் பூட்டப்பட்டது. தகவலறிந்து காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், பென்சில் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் இந்த சம்பவம் அரங்கேறியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையில், போலீசில் சரணடைந்த மாணவரை மாவட்ட சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி, பாளை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். பள்ளிக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்லும் உடமைகளை முற்றிலுமாக சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேற்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இன்று காலையில் சம்பவம் நடந்த பாளை பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கு நுழையும் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு, அவர்கள் புத்தக பைகள் மற்றும் பொருட்கள் ஒன்று விடாமல் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர். மேலும் மாணவர்களுக்கு இன்று காலையில் நல்லொழுக்க போதனைகளும் சொல்லி கொடுக்கப்பட்டன. சம்பவத்தை கண்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பல பெற்றோர்கள், இன்று தங்கள் பிள்ளைகளை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அனுப்பாமல், அவர்களே நேரடியாக பைக்குகளில் கொண்டு வந்து விட்டு சென்றனர். எவ்வித பிரச்னைக்கும் செல்லக்கூடாது என அறிவுரையும் கூறி பள்ளிக்குள் அனுப்பினர். பாளையில் மற்ற தனியார் பள்ளிகளிலும் இன்று காலை உயர்நிலை வகுப்பு மாணவர்களின் புத்தக பைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் பைகளில் காணப்பட்ட பிளேடு உள்ளிட்ட பொருட்களை தேவையின்றி கொண்டு வரக்கூடாது என ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்ததோடு, அவற்றை வாங்கி கையில் வைத்துக் கொண்டனர்.

The post பாளையில் மாணவன், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு எதிரொலி; பள்ளிகளில் பலத்த சோதனைக்கு பிறகே மாணவர்கள் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article