பாலுசெட்டி சத்திரம் பகுதியில் விவசாயிகள் தின விழா

3 weeks ago 6

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் கொரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக விவசாயிகள் தின விழா மற்றும் பயிர் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக சிறுகாவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குநர் காளியம்மாள் தலைமை தாங்கி, பங்கேற்றார். பின்னர், அவர் விவசாயிகளிடம் பேசுகையில், ‘விவசாயிகள் மண்வளத்தை பாதுகாக்க சணப்பை, தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை ஆண்டுதோறும் விதைத்து பூ விடும் தருவாயில் மடக்கி உழ வேண்டும்.

இதன்மூலம் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு, அங்கக கார்பன் அளவும் அதிகரிக்கும், பயிர் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அரசு மானிய விலையில் பசுந்தாள் உரப்பயிர் விதைகளை வழங்கி வருகிறது. அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வளர்ந்து வரும் நேனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நேனோ டிஏபி போன்ற உரங்களைத் தெளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பயன்பாட்டுத் திறன் அதிகரிப்பதோடு, நல்ல மகசூலும் கிடைக்கும்’ என்றார்.

அடுத்ததாக பேசிய கொரமண்டல் நிறுவனத்தில் மண்டல மேலாளர் சங்கர் கொரமண்டல் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்கி வரும் சேவைகள், நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதன் வரலாறு குறித்தும் விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.

பின்னர் நோக்கங்கள் பற்றி உழவியலாளர் முனைவர் ஜெயராஜ், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும், குரோமோர் நேனோ டிஏபியின் பயன்பாடு குறித்தும் பேசினார். இந்நிகழ்வில் கொரமண்டல் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மார்க்கெடிங் அதிகாரி சீனிவாசன், வேலூர் மார்க்கெடிங் அதிகாரி கார்த்திகேயன், கள அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் 90 விவசாயிகள் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில், ஜானகிராமன் நன்றி கூறினார்.

The post பாலுசெட்டி சத்திரம் பகுதியில் விவசாயிகள் தின விழா appeared first on Dinakaran.

Read Entire Article