
பெங்களூரு,
கர்நாடகாவில் வசித்து வரும் 17 வயது இளம்பெண்ணுக்கு விக்கி என்ற நபருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, தன்வசப்படுத்தி அந்த இளம்பெண்ணை, விக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு அவரை அடித்து, தாக்கியும் உள்ளார்.
இந்த விவரம் பற்றி தெரிய வந்ததும், இளம்பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனால், கான்ஸ்டபிள் அருண் என்பவர், குற்றம் சாட்டப்பட்ட விக்கியுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார்.
இதன்பின்பு இளம்பெண்ணிடம், நீதி கிடைக்க செய்வேன் என்றும் வேலை வாங்கி தருகிறேன் என்றும் கான்ஸ்டபிள் அருண் பொய்யான வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். பின்னர், பெங்களூரு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அழைத்துள்ளார்.
இதனை நம்பி அந்த இளம்பெண் ஓட்டலுக்கு சென்றதும் மதுபான பாட்டிலில் மயக்க மருந்து கலந்து, அதனை குடிக்க கொடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் மறுத்ததும், கட்டாயப்படுத்தி குடிக்க வற்புறுத்தி இருக்கிறார்.
இதன்பின்னர், இளம்பெண்ணை கான்ஸ்டபிள் அருண் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வீடியோவும் எடுத்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வெளியே கூறினால், ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அருண் மற்றும் விக்கி ஆகிய இருவரையும் போக்சோ மற்றும் புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதனை போலீசார் நேற்று தெரிவித்தனர். 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.