
பீஜிங்,
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் பகுதியில் ஜாங் என்ற பெண் தன்னுடைய 8 வயது மகனுடன் காரில் பயணித்தபடி இருந்துள்ளார். அவர்கள் ஓரிடத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, உடன் இருந்த மகன் வீட்டுக்கு போக வேண்டாம். இந்த பயணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறினான்.
அவனை சமரசப்படுத்தி, வழிக்கு கொண்டு வர ஜாங் எவ்வளவோ முயற்சித்து உள்ளார். ஆனால், தொடர்ந்து அடம்பிடித்த அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் காரில் இருந்து வெளியே குதித்து விடுவேன் என மிரட்டியிருக்கிறான்.
இதனால், காரை பாதுகாப்பாக ஓட்டி செல்ல முடியாது. அவனிடம் பேசுவது வேலைக்கு ஆகாது என உணர்ந்த ஜாங் விரைவு சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தியுள்ளார். பின்னர், மகனை கட்டாயப்படுத்தி காரில் இருந்து கீழே இறக்கினார். அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என நினைத்ததுடன், அதற்கு தண்டனை கொடுப்பதே சரியென்ற முடிவுக்கு வந்த ஜாங், குச்சியை எடுத்து, அடித்து விளாசியுள்ளார்.
அவன் ஓடி விடாமல் இருக்க அவனுடைய சட்டையை பிடித்து கொண்டார். வலி பொறுக்க முடியாமல் அந்த சிறுவன் அலறி துடித்துள்ளான். நடந்த சம்பவம் பற்றி ஜாங் கூறும்போது, இதுபோன்ற சாலையில் காரை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எனக்கு தெரியும். ஆனால், அவனுக்கு உடனடியாக பாடம் கற்பிக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது என கூறினார்.
சீனாவில் சாலை பாதுகாப்பு விதிகளின்படி, அவசர வழித்தடத்தில் யாரேனும் இதுபோன்று வாகனங்களை நடுவழியில் நிறுத்தினால், 200 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,400) அபராதம் விதிக்கப்படும். வாகன உரிமத்தில் 9 புள்ளிகள் கழிக்கப்பட்டு விடும்.
எனினும், தனது தவறை உணர்ந்து அந்த சிறுவன் பின்னர் மன்னிப்பு கேட்டு கொண்டான். இது தவறானது. இதனை என்னிடம் இருந்து மற்ற குழந்தைகள் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் என சிறுவன் பேசும் வீடியோ ஒன்றை ஆன்லைனில் ஜாங் பதிவேற்றம் செய்துள்ளார்.