எர்ணாகுளம்,
கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது. இதில், நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் மோகன் லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனிடையே, ஹேமா கமிஷன் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 4 நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண் நடிகை அளித்த புகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வும், முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மராடு போலீசார் கடந்த ஆகஸ்டு 29-ல் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் முகேஷை சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ந் தேதி கைது செய்தனர். கைதுக்கு பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆற்றல் சோதனை நடத்தப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கேரள அரசின் அலட்சியம் காரணமாக தான் அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெறுவதாக அந்த நடிகை தெரிவித்திருந்தார். அந்த நடிகை மீது அவரது, சொந்த உறவின பெண் ஒருவரே போக்சோ புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நடிகை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை பிரிவும் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் முகேஷுக்கு எதிராக டிஜிட்டல் ஆதாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.