மதுரை,
பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டியும் நமது நினைவுக்கு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையெட்டி முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடங்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் முதல் இடத்தையும், 15 காளைகளை அடங்கிய குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 2-வது இடத்தையும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்த நிலையில் மாட்டு பொங்கலையொட்டி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், பார்வையாளர் மேடையில் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் சிலர் அமர்ந்துள்ளனர். அந்த பதாகையில், "SAVE அரிட்டாப்பட்டி" TUNGSTINE MINING" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.