சென்னை: ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தைப் போலவே, கவரைப்பேட்டை ரயில் விபத்தும் நிக்ழந்திருப்பது டேட்டா - லாக்ர் வீடியோ (data - logger video) மூலம் உறுதியாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடக்கத்தில் இந்த ரயிலுக்கு முதன்மை தடத்தில் செல்ல பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த தவறான இன்டர்லாக் காரணமாக அது லூப் தடத்தில் நுழைந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியது. அதேபோல், கவரைப்பேட்டையில் விபத்தில் சிக்கிய மைசூரு - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் முதன்மை தடத்தில் செல்ல பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அது லூப் தடத்தில் சென்று நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.