கோவை : இந்தியாவின் முதல் வனம்சார்ந்த பொருட்களுக்கான அருங்காட்சியகம் என்ற பெருமையுடன், கோவை வனக்கல்லூரி வளாகத்தில் உள்ல காஸ் பாரெஸ்ட் மியூசியம் அமைந்துள்ளது. மெட்ராஸ் மாகாணத்தில் கோவை தெற்கு மண்டல வனப்பாதுகாவலராக பணியாற்றிய ஹென்றி ஆண்டர்சன் காஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், அவரது பெயரை தாங்கியபடி நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
காஸ் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தை, 1902ம் ஆண்டில் அன்றைய மெட்ராஸ் மாகாண ஆளுநர் ஆம்ட்ஹில் பிரபு திறந்து வைத்தார். அருங்காட்சியகத்துக்கு புதிய வரவுகள் கூடிக் கொண்டே போனதால், தற்போதுள்ள கட்டிடம் 1915ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது சில ஆண்டுகள் இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டு, பிரிட்டிஷ் ராணுவம் பயன்படுத்தி வந்தது. அந்த காலகட்டத்தில் பல்வேறு அரிய பொருட்கள் சேதமடைந்ததோடு, பல பொருட்கள் ஏலமும் விடப்பட்டன.
பிறகு வந்த வனக்கல்லூரி முதல்வர் ரங்கநாதன் என்பவரின் முயற்சியால், மீண்டும் மறுநிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது, ஒன்றிய வனமரபியல் மற்றும் விதை ஆராய்ச்சி துறையின் கீழ் பழமை மாறாமல் இயங்கி வருகிறது. வன உயிரினங்கள், தாவரவியல், மரம், விலங்குகள், இனவியல், வனபொறியியல், பூச்சியல், புவியியல், மர கைவினை பொருட்கள் உள்ளிட்ட வகைமைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பறவைகள், விலங்குகள், மரம், தாவரம் உள்ளிட்டவை குறித்தும், வனம் மற்றும் இயற்கை குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ள அருங்காட்சியகத்தில், பழங்காலத்தில் பயன்படுத்திய துப்பாக்கிகள், ஆயுதங்கள், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கருவிகள், பழங்குடியின மக்களின் ஆடை, அணிகலன்கள், பறவைகளின் கூடுகள், பதப்படுத்தப்பட்ட உயிரினங்களின் உடல் பாகங்கள், பூச்சியினங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1956ம் ஆண்டில் மைசூர் அரசர் ஜெயச்சந்திர உடையார் வழங்கிய காட்டு மாடு, யானை மற்றும் காளையின் முழு எலும்புக்கூடு, 14 மாத யானையின் கரு, மிகப்பெரிய தீக்கோழியின் முட்டை உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதேபோல, 5.7 மீட்டர் சுற்றளவு கொண்ட 456 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேக்குமரம், 1.75 டன் எடையும், 10.2 மீட்டர் உயரமும் கொண்ட சந்தனமரம், 2 கிலோ எடையுள்ள பெரிய விதை ஆகியவை பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
வனத்தின் மொத்த உருவகமாக உள்ள இந்த அருங்காட்சியகத்தில், வனவியல் குறித்த விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். இதனால் அதிக அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது குறித்து பார்வையாளர்கள் கூறியதாவது:
காஸ் அருங்காட்சியகத்தில் பல அரிய பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும் வகையிலான வனம் சார்ந்த பொருட்கள் உள்ளன.
மூலம் வனம் மற்றும் விலங்குகள், உயிரினங்கள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கிறது. கோவை நகருக்குள் குடும்பத்துடன் பொழுதுபோக்காக மட்டுமின்றி, நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அருங்காட்சியகம் இயங்கும் நேரம்
காஸ் அருங்காட்சியகம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஒன்றிய அரசு விடுமுறை நாட்களை தவிர்த்த மற்ற வேலை நாட்களில் இயங்கும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும். 5 முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.20, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
The post பார்வையாளர்களை கவரும் அரிய பொக்கிஷங்கள் அடங்கிய காஸ் வன அருங்காட்சியகம் appeared first on Dinakaran.