பிரிஸ்பேன்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், அடுத்து வந்த கில் 1 ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும், ரோகித் சர்மா 10 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா தரப்பில் ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் இன்றைய ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார்.
அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரது காயம் குறித்து கண்டறிய ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமடைய நீண்ட காலம் ஆகும் என தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.