லண்டன்,
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனையொட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கும் நம்பர் 4வது இடத்தில் விளையாடும் கோலி - சுமித் துருப்புச்சீட்டு என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அந்த இருவரில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்கள் இடம் பெற்றிருக்கும் அணியே கோப்பையை வெல்லும் என்று மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்டீவ் சுமித் மீண்டும் 4-வது இடத்தில் விளையாடியதை சமீபத்திய ஒருநாள் தொடரில் பார்த்தோம். அந்த இடத்தில் அவர் மீண்டும் தன்னுடைய பழைய ஆட்டத்திற்கு வந்துள்ளதையும் கவனிக்க முடிகிறது. அந்த இடத்தில் மீண்டும் அவர் பொறுமையுடன் ரிலாக்ஸாக விளையாடுகிறார்.
விராட் கோலி ஆஸ்திரேலியாவில் கால் வைத்ததும் நாம் வெற்றிகரமாக செயல்பட்ட இடத்திற்கு மீண்டும் வந்துள்ளோம் என்பதை நன்றாக அறிவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நம்பர் 4 பேட்ஸ்மேன்களில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து மொத்த தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாம்" என்று கூறினார்.