பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. கடந்த இருமுறை தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்திய அணிக்கு இந்த முறை பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.
மறுபுறம் ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. இதனால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த தொடர் குறித்து தற்போதைய ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருக்கும் நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர். முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். ஆனால் இப்போது இருக்கும் விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பவர் கிடையாது. எனவே நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம். ஆனாலும் அவர் இப்பொழுதும் நமக்கு எதிராக ரன் அடிக்கக் கூடியவர் என்பதை மறந்து விடக்கூடாது" என்று கூறினார்.
அடுத்ததாக விராட் கோலி குறித்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறுகையில், "இந்தியாவில் நாங்கள் விளையாடும்போது ஆக்ரோஷமான செயல்கள் எதுவும் நடக்கவில்லை. அவரும் எங்களை எதுவும் சீண்டவில்லை. அவர் அங்கு சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். எனவே இங்கும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்ய முயற்சிப்பார்" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், "நான் அவருடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்தேன். அவருக்கு சண்டையிடுவதும், சண்டை செய்வதும் மிகவும் பிடிக்கும் என்பதை அவர் அருகில் இருந்து தெரிந்து கொண்டேன்" என்று கூறினார்.