பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடைசியாக காபா மைதானத்தில் விளையாடிய போட்டியில் நீண்ட வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்தது. அந்த தன்னம்பிக்கையுடன் இம்முறையும் இந்தியா வெற்றி பெற முயற்சிக்கும் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிருந்து இது 5 போட்டிகளைக் கொண்ட தொடர் என்பதை மறந்து 3 போட்டிகள் கொண்ட தொடர் என்று நினைத்துக் கொண்டு இந்தியா விளையாடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எங்களுடைய அணியின் நிலைமை தற்போது நன்றாக இருக்கிறது. நாங்கள் நேற்றிரவு மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினோம். ஆம் 2வது போட்டி எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. ஆனால் இங்கிருந்து நாங்கள் இந்த தொடரை 3 போட்டிகள் கொண்ட தொடராக கருதுகிறோம். எனவே 3வது போட்டியில் நாங்கள் வென்றால் பின்னர் மெல்போர்ன், சிட்னியில் எங்களுடைய கை ஓங்கியிருக்கும்.
இதைத்தான் நாங்கள் அணி மீட்டிங்கில் பேசினோம். நாங்கள் இதை 3 போட்டிகள் கொண்ட தொடராக பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். கடந்த போட்டியை மறந்து விட்டு 3 போட்டிகள் கொண்ட இத்தொடரை வெல்வோம் என்று முடிவெடுத்துள்ளோம். அப்படி பார்த்தால் 2 - 0 என்ற கணக்கில் நாங்கள் வெல்வோம். இந்த நேர்மறையான சிந்தனையைதான் நாங்கள் அணியில் கொண்டுள்ளோம்.
காபாவில் மீண்டும் விளையாடுவது 2021-ல் விளையாடிய பழைய நினைவுகளை எனக்கு கொடுக்கிறது. எங்கள் மொத்த அணியும் இங்கே வந்து பழைய நினைவுகளை திரும்பிப் பார்த்தோம். இம்முறையும் இங்கே பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.