
புதுடெல்லி,
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழங்கப்படும் என அறிவித்தார்.
இது குறித்து அவர் பேசும்போது, 'உலகில் மிகவும் வேகமாக செயற்கை நுண்ணறிவு தனது தடத்தை பதித்து வருகிறது. இந்த ஆண்டு முதலே இந்திய பள்ளிக் குழந்தைகளை செயற்கை நுண்ணறிவு கல்வியுடன் இணைக்க நாம் முயற்சிக்க வேண்டும். எனவே வயதுக்கு ஏற்ற, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடப்புத்தகங்களைத் தயாரிக்குமாறு நமது கல்வியாளர்களை கேட்டுக்கொள்கிறேன். நமக்கு தேவை படிப்படியான சீர்திருத்தம் அல்ல, அதிவேகமான முன்னேற்றம். இதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை இந்திய மொழிகளுடன் இணைப்பது அவசியம்' என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு படித்து வந்த பீகார் மாணவி ஜியா குமாரி, தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண் பெற்றதை பாராட்டிய தர்மேந்திர பிரதான், இந்த விவகாரத்தில் தமிழக அரசை மறைமுகமாக சாடினார். மொழியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் கண்களை ஜியா குமாரி திறந்திருப்பதாக தர்மேந்திர பிரதான் கூறினார்.