பார்கின்சன் நோய்

4 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயுர்வேதத் தீர்வு!

ஒரு தாவரத்தின் உயிர் அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது. அதேபோல் ஒரு மனித உடலின் ஆரோக்கியத்திற்கு உடலின் ஆணிவேராக கருதப்படும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால்தான் ஆயுர்வேதத்தில், தலை என்னும் சிரசு, உத்தமங்கம் என்று கருதப்படுகிறது. அதாவது, உடலின் மிக உயர்ந்த முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. அப்பகுதியில் ஏற்படும் ஒரு மூளைச் சிதைவு நோய்க்கு நடுக்குவாதம் (பார்கின்சன்) என்று பெயர். இந்த நடுக்குவாதத்தைப் பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

நடுக்குவாதத்தில், நரம்பு மண்டலம் பாதிப்படைந்து அதன் காரணமாக அசைவுகளில் பாதிப்பு, ஒரு செயலை செய்வதில் குறைந்த செயல்திறன், தசை இறுக்கம் ஆகியவை ஏற்படும் இதை சமகால மருத்துவத்தில், பார்க்கின்சன் நோய் என்று விளக்குகின்றனர். இந்த பார்கின்சன்நோய் பெரும்பாலும் 60 அல்லது 80 வயதிற்குள் ஏற்படுகிறது.

பார்கின்சன் நோய் ஏற்பட காரணங்கள்

*இந்நோயில் பல அறிகுறிகள், மூளையில் உள்ள டோபமைன் எனப்படும் ஹார்மோன் குறைவதால் ஏற்படுகிறது. டோபமைன் சுரப்பி 80 சதவீதம் குறைந்த பிறகே இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படும். அதனை உற்பத்தி செய்கின்ற சில மூளை செல்கள் இறந்து விடுவதே இதற்கு காரணமாகும்.

*பார்கின்சன் நோயில் நரம்பு முடிச்சு களில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் நார் – எபிநெபரின் என்னும் நரம்பியக் கடத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்த கட்டுப்பாடு போன்ற தன்னியக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் தன்னியக்க நரம்பு மண்டலத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் நார் – எபிநெபரின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

*பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பலரின் மூளையில், லிவி பாடிஸ் எனப்படும் அசாதாரண புரதக் கட்டிகள் காணப்படுகிறது. இது எதனால் என்பதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

*சுற்றுச்சூழலும் இந்நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கிறது.

*பரம்பரை நோயாகவும் இந்நோய் வருகிறது.

அறிகுறிகள்

*இந்த நோயின் முதல் அறிகுறியாக நடுக்கம் ஏற்படத் தொடங்கும். பின், தலை மற்றும் கை கால்களில் நடுக்கம் ஏற்படும்.

*இந்நோயில், ரெஸ்ட்ரெமர் காணப்படுகிறது. அதாவது ஓய்வெடுக்கும் பொழுது நடுக்கம் காணப்படும். ஆனால் உடல் உறுப்புகள் செயலில் இருக்கும்போது, நடுக்கம் காணப்படுவதில்லை அல்லது குறைந்த நடுக்கம் காணப்படலாம்.

*கைகளை நீட்டி மடக்கும்பொழுது சிரமம், விறைப்புத் தன்மை காணப்படும்.

*பேசுவதில் சிரமம், நடப்பதில் சிரமம், எழுதுவதில் சிரமம், கூன்போட்டு நடப்பார்கள்.

*உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முக அமைப்பு காணப்படும்.

*இமைகள் குறைவாக இமைக்கும்.

*ஞாபக மறதி

*இதனால் உடலில் மெதுவாக நரம்பு சிதைவு ஏற்படுகிறது.

*அதன்பிறகு மன அழுத்தம், கவலை, மறதி டிமென்ஷியா என்னும் நினைவாற்றல் இழப்பு, குழப்பம், மனச்சோர்வு, இயக்கம் போன்றவை பாதிப்படையலாம்.
ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதன் முக்கியத்துவம் இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் வழக்கமான வயதான அறிகுறிகளாக இருக்கக் கூடும் என்று மக்கள் எப்போதும் நினைக்கின்றனர். எனவே, அவர்கள் மருத்துவ உதவியை நாடுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகிறது.

எவ்வாறாயினும், நோயின் ஆரம்பக் கட்டங்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அது பயனுள்ளதாக இருக்கும். அதனால் தான் பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும்வரை நோயாளிகள் சிகிச்சையைத் தொடங்கவில்லை என்றால், பின் அது பலனளிக்காது. மேலும் பக்கவாதம், மூளையழற்சி, அல்சீமர் நோய் போன்ற மற்ற நோய்களின் அறிகுறிகள் இதைப்போலவே இருப்பதால், ஆரம்பக் கட்டங்களில் பார்கின்சன் நோயைக் கண்டறிவது மருத்துவர்களுக்கு கடினமாக இருக்கும்.

பார்கின்சன் நோய்க்கான ஆபத்துக் காரணிகள்

வயது: இது பொதுவாக வயதுக்கு ஏற்ப ஆபத்து அதிகரிக்கிறது. நோயின் ஆரம்பம் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் தொடங்குகிறது.

பரம்பரை: குடும்பத்தில் ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருந்தால், அது மற்றவருக்கும் நோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எப்படியிருந்தாலும், குடும்பத்தில் உள்ள பலர் இந்நோயால் பாதிக்கப்படாத வரை, ஒருவரின் ஆபத்துகள் குறைவாகவே இருக்கும்.

பாலினம்: பெண்களை விட ஆண்களுக்கு இந்த கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நச்சுகளின் வெளிப்பாடு: களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்ற நச்சுகளின் தாக்கம், பார்கின்சன் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

பார்க்கின்சன் நோயின் ஆயுர்வேத கண்ணோட்டம்

ஆயுர்வேதத்தில், இந்நோய் கம்பவாதம் என விளக்கப்பட்டுள்ளது. கம்பம் என்றால், நடுக்கம் என்று பொருள், மூளையில் உள்ள நரம்பின் செயல்களுக்கு வாதம், கபம் என்னும் தோஷங்களின் குணம் உதவுகிறது. கம்பவாதத்தில் வாத குணமானது தடுக்கப்பட்டு கபத்தின் குணம் மந்தமடைந்து இந்த நோயை உருவாக்குகிறது. வாத கபத்தின் குணங்களை சமநிலைப்படுத்தும் வகையில் சிகிச்சைகளை கடைபிடிப்பது அவசியம்.

ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சைகள்

உத்வர்த்தனம் (மூலிகைப் பொடி மசாஜ்): அதற்கான மருந்துகள், திரிபலா சூரணம், சரக்கொன்றை சூரணம்.

தலம் (உச்சந்தலையில் மூலிகை வைத்தல்): அதற்கான மருந்துகளில் ஒன்றான ராஸ்னாதி சூரணத்தை நிம்பாமிர்த ஏரண்ட தைலத்துடன் கலந்து வைக்கலாம்.

அபியங்கம் (மசாஜ்): மருத்துவ குணமுடைய தைலங்களில், கார்பாசாஸ்த்யாதி தைலம், சகச்சாரதி தைலம், மாஷ தைலம், ப்ரபஞ்சன விமர்தன தைலம் போன்றவை கொண்டு உடலை மசாஜ் செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் இயக்கங்களை மேம்படுத்தவும், நடுக்கத்தைக் குறைக்கவும், உடலை சமநிலையில் வைக்கவும் உதவும்.

பத்ர பிண்ட ஸ்வேதனம்: மூலிகை இலைகளைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தல்.

விரேசனம் (பேதிக்கு மருந்து கொடுத்தல்) அதற்கு சுகுமார ஏரண்ட தைலத்தை உபயோகப்படுத்தலாம்.

பிழிச்சில்: மூலிகை எண்ணெய்களை உடல் முழுவதும் ஊற்றுதல்.

நஸ்ய சிகிச்சை: மூக்கில் சொட்டு மருந்து விடுதல், அதற்கு லசுண தைலத்தை பயன்படுத்தலாம்.

வஸ்தி – என்னும் இனிமா கொடுத்தல்

சிரோவஸ்தி – தலையில் எண்ணெயை தேக்கி வைத்தல்.

யோகப் பயிற்சியின் பயன்கள்: பார்கின்சன் நோய்க்கு யோகா பயிற்சி செய்வதன் மூலம் நரம்புகள் வலுப்படும்.

*நல்ல இரவு தூக்கத்தை பெற உதவும்.

*பிராணாயாமம் பயிற்சி எனப்படும் மூச்சுப் பயிற்சியை செய்வது உகந்தது.

*ஆயுர்வேத மருந்துகள் (உள் மருந்துகள்)

*மாஷா ஆத்ம குப்தாதி பால் கஷாயம்

*பூனைக்காலி விதை (கபிகச்சு பீஜ) சூரணம்

*திப்பில் சூரணம்

*அஸ்வகந்தா சூர்ணம் – அஸ்வகந்தா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு 100 மிலி தினமும் பாலுடன் கலந்து உட்கொள்வதின் மூலம் நரம்புகள் வலுப்படும்.

*அஷ்டவர்க்க கஷாயம்

*தனதனயனாதி கஷாயம்

*பலா அரிஷ்டம்

*அஸ்வகந்தா அரிஷ்டம்

*ரசோனாதி வடி

*ப்ரஹத்வாத சிந்தாமணி

*ரசாயனம் ஆயுர்வேத மருத்துவத்தில் ரசாயன மூலிகைகள்

* உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் இளமை நிலையை ஊக்குவிக்கின்றன. நரம்பு மண்டலத்தை மீட்டெடுக்கும் செயல்பாட்டைக் கொண்டு வருகின்றன.

*திப்பிலி ரசாயனம்

*லசுண ரசாயனம்

*பிரம்மி (வல்லாரை) – நினைவாற்றலை மேம்படுத்த பயன்படுகிறது.

*ஜோதிஷ்மதி (வாலுளுவை) – அறிவாற்றலைத் தூண்டுவதாகவும் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. இம்மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையை பெற்று உட்கொள்ளலாம்.

*ஆரோக்கியமான உணவே முதன்மை – உணவின் மருத்துவக் குணங்கள், ஆயுர்வேதத்தில் சிகிச்சையின் ஒரு வடிவமாகவும். உளவியல் மற்றும் உடலியல் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வழிமுறையாகவும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

*பத்தியம் (பயன்படுத்த வேண்டிய உணவு) பழைய அரிசி, கோதுமை, பழங்கள், காய்கறிகள், பருப்புகள், பால் மற்றும் பால் பொருட்கள், மாதுளை, எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள் பூண்டு, பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை உட்கொள்ளலாம்.

*அபத்தியம் (தவிர்க்க வேண்டிய உணவுகள்) பார்லி, பட்டாணி, டீ, காபி அதிகப்படியான புரத உணவு, சூடான காரமான உணவு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, துவரம்பருப்பு, நாவல்பழம், பாகற்காய், தேன், பாக்கு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post பார்கின்சன் நோய் appeared first on Dinakaran.

Read Entire Article