பாரம்பரிய நெல் சாகுபடி…அரிசியாக்கி நேரடி விற்பனை…

2 months ago 8

இன்றைய இளைஞர்கள் மத்தியில் விவசாயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரசாயன இடுபொருட்களின் தீமைகளை அறிந்துகொண்ட இளம் தலைமுறை இயற்கை விவசாயம் மீது கவனத்தைத் திருப்பி இருக்கிறது. அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, குப்பம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்ற இளைஞர் மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம். “குழந்தைப் பருவத்தில் இருந்தே எனது தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்தவன் நான். அவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் பயறு வகைகள், காய்கறி வகைகள், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்வார்கள். ஆனால் எந்த பயிருக்கும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியது கிடையாது. அவர்களின் விவசாய முறை தோல்வி அடைந்ததும் கிடையாது. அவர்களின் நிலம் மலடானதும் கிடையாது. அவர்களின் விவசாய முறைகளைப் பார்த்து வளர்ந்த நான், அவர்களைப் போலவே இயற்கை வழி விவசாயத்தைத் தொடர வேண்டும் என விரும்பினேன்.

பட்டப்படிப்பை முடித்த கையோடு கடந்த 5 வருடமாக எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி, பூங்கார் உள்ளிட்ட நெல் ரகங்களைப் பயிரிடத் தொடங்கினேன். முதலில் மாப்பிள்ளை சம்பாவைப் பயிரிட்டேன். இதில் ஒரு ஏக்கருக்கு 12 முட்டை நெல் கிடைத்தது. மருந்து போடாமல் பயிர் செய்தால் இப்படித்தான் மகசூல் கிடைக்கும் என்று அருகில் இருப்பவர்கள் கூறினார்கள். ஆனால் எனக்கு மருந்து, ரசாயன உரங்கள் போட்டு விவசாயம் செய்வதில் விருப்பம் இல்லை. எந்தவொரு உரமும் போடாமலே 12 மூட்டை நெல் கிடைத்த நமக்கு உரிய முறையில் பயிரிட்டால் நல்ல மகசூல் பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதிக மகசூல் கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்தேன். இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் பலரையும் நேரில் சென்று பார்த்தேன். இதன்மூலம் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வது பற்றி தெரிந்துகொண்டேன்.இதில் கிடைத்த அனுபவத்தில் பூங்கார் ரக நெல்லைப் பயிரிட்டேன். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 20 கிலோ விதை நெல் தேவைப்பட்டது. விதை நெல்லை கலசப்பாக்கம் விதைகள் சேகரிப்பு மையத்தில் இருந்து ஒரு கிலோ ரூ.70 என்ற கணக்கில் வாங்கி வந்தேன். விதை நெல்லை நேரடியாக விதைக்காமல் நாற்று பாவி நடவு செய்தேன். நடவு செய்வதற்கு முன்பு நிலத்தில் பச்சைப்பயறு, காராமணி, உளுந்து, கொள்ளு, சோளம், கம்பு உள்ளிட்ட பல தானியப் பயிர்களை தலா 2 கிலோ அளவுக்கு நிலத்தில் தூவி வளர்க்கத் தொடங்கினேன். இந்த பயறு வகைகள் வளர்ந்து வந்த 25வது நாளில் நிலத்திலேயே மடக்கி உழுதேன்.

அதன்பின்னர் நிலத்திற்கு தண்ணீர் விட்டு 20 நாட்கள் மட்கச்செய்தேன். மக்கிய பின்பு மீண்டும் ஒருமுறை நிலத்தினை உழுது நாற்றங்காலில் வளர்ந்துள்ள 17 நாட்கள் வயதுடைய பூங்கார் ரக நாற்றுகளை ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்தேன். இதிலிருந்து 10வது நாளில் முதல் களை எடுப்போம். களைகளை மீண்டும் வெட்டி நிலத்திலேயே சேற்றோடு கலந்துவிடுவோம். இது ஒரு நல்ல உரமாக பயிர்களுக்கு மாறும். அதன்பிறகு 10 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை களை எடுத்து சேற்றை களைத்துவிடுவேன். 65வது நாளில் மீண்டும் ஒருமுறை புளித்த புங்கம் புண்ணாக்கு நீரைத் தெளிப்போம். ஒரு ஏக்கருக்கு 20 கிலோ புங்கம் புண்ணாக்கு தேவைப்படும். இது பயிர்களுக்கு பூச்சி விரட்டியாகவும் செயல்படும். 70வது நாளில் பால் நெல் வரத்தொடங்கும். இதில் இருந்து 15வது நாளில் தண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு 10 நாட்கள் கழித்து அறுவடை செய்யத் தொடங்குவோம். ஒரு ஏக்கருக்கு 80 கிலோ கொண்ட 25 மூட்டை நெல் மகசூலாக கிடைத்தது. இதை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறோம். ஒரு மூட்டை பூங்கார் நெல்லில் 50 கிலோ (2 சிப்பம்) அரிசி கிடைத்தது. பாரம்பரிய நெல்லில் தவிடு குறைவாக கிடைக்கும். அரிசி அதிகமாக கிடைக்கும். இதில் ஒரு கிலோ அரிசியை ரூ.80 லிருந்து ரூ.110 வரை விலை வைத்து விற்பனை செய்கிறேன்.

வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து பூங்கார் அரிசியை வாங்கிச் செல்கிறார்கள். இரண்டு ஏக்கரில் 2500 கிலோ அரிசி கிடைத்தது. ஒரு கிலோ அரிசியை சராசரியாக ரூ.100க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் எனக்கு ரூ.2.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் நடவுக்கூலி ரூ.5000, புங்கம் புண்ணாக்கு ரூ.5000, களை வெட்டுவது, அறுவடை செலவு ரூ.10000 என மொத்த செலவு ரூ.20 ஆயிரம் போக ரூ.2.3 லட்சம் லாபமாக கிடைக்கிறது. மூன்று மாதத்தில் அதிக பராமரிப்பு இல்லாமல் எனக்கு கிடைக்கும் இந்த லாபம் மிகப்பெரிய லாபம்தான். எனது நிலத்தில் தாத்தா, பாட்டியைப் போல காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்ய இருக்கிறேன். இதையும் முழுக்க முழுக்க ரசாயனமில்லா இயற்கை முறையில் செய்ய இருக்கிறேன்’’ என தீர்மானமாக பேசுகிறார்.
தொடர்புக்கு:
லோகநாதன் – 93423 89024.

The post பாரம்பரிய நெல் சாகுபடி…அரிசியாக்கி நேரடி விற்பனை… appeared first on Dinakaran.

Read Entire Article