பாம்பன் புதிய ரெயில்வே பாலம் திறப்பு எப்போது? - வெளியான தகவல்

2 months ago 19

ராமேசுவரம்,

ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.

இந்த பாலத்தில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தநிலையில், புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர், மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். தொடர்ந்து பாம்பன் வந்த அவர், டிராலியில் அமர்ந்து புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலமானது 17 மீட்டர் உயரத்திற்கு முழுவதுமாக திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மூடப்பட்டது.

இதை தொடர்ந்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசிக் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்துள்ளேன். ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், ஆய்வு செய்த பின்னர் புதிய ரெயில் பாலம் திறக்கப்படும் தேதி குறித்து முடிவு செய்யப்படும். இம்மாதத்திற்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்படும்.

ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. அதற்கான பணி நடந்து வருகிறது. பழைய பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை மிகவும் பாதுகாப்பாக அகற்றி அதை ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் நினைவுச்சின்னமாக வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. என்றார்.

 

Read Entire Article