
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தி.மு.க அரசின் அலட்சியப்போக்கால் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்திருக்கும் மா விவசாயிகள் – பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்குவதோடு மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை திமுக அரசு நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டில் நியாயமான விலை கிடைக்காததாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிவடைந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களாலும் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் திரும்பிய பின்னரும் மா பிரச்னைக்கு தீர்வு காணப்படாதது விவசாயிகள் மீதான தி.மு.க அரசின் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.
கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து அம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அறிவித்திருக்கும் நிலையில், தி.மு.க அரசும், அதன் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் மா உற்பத்தியை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆயிரக்கணக்கான மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றம், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மா விவசாயத்தை பாதுகாக்கவோ, உரிய இழப்பீடு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க அரசின் அலட்சியப் போக்கால் நடப்பாண்டில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக அறிவிப்பதோடு, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.