பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஜார்க்கண்ட் இன்ஜினியர்கள் ஆய்வு: ஆய்வு ரயிலை இயக்கி சோதனை

4 weeks ago 6

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் ஜார்க்கண்ட் இன்ஜினியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வு ரயிலை இயக்கியும் சோதனை நடத்தப்பட்டது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் பணிகள் முடிந்த நிலையில், தினமும் ஒவ்வொரு பிரிவுகளாக பாலத்தில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. கப்பல் கடந்து செல்லும் கால்வாய் மேலே 700 டன் எடையில் அமைந்துள்ள செங்குத்து தூக்குப்பாலம், கடந்த அக்.1ல் மேலே உயர்த்தி, இறக்கி சோதனை செய்யப்பட்டது. தூக்குப்பாலத்தை இதுவரை 18 முறை முழுமையாக 17 மீட்டருக்கு உயர்த்தி இறக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்கு தயார் நிலையில் உள்ள புதிய ரயில் பாலத்தில், ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் தலைவர், நிர்வாக இயக்குநர் பிரதீப் கவுர் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து விபத்தின்றி வெற்றிகரமாக முடித்த பொறியாளர்களை பாராட்டி தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்க அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தை ஒ.ெஹச்.இ ஆய்வு ரயிலை இயக்கி சோதனை செய்தனர். ஓவர் ஹெட் உபகரணங்களின் (ஒ.ெஹச்.இ) நிலையைச் சரிபார்க்க இந்த ரயில் இயக்கப்பட்டது. இதில் காண்டாக்ட் வயர், கேட்டர்னரி வயர், டிராப்பர் வயர், இந்த கம்பிகளை தாங்கும் கேன்டிலீவர், மாஸ்டில் இருந்து கம்பிகளை தனிமைப்படுத்தும் இன்சுலேட்டர், தொய்வு ஏற்படாமல் தடுக்க காண்டாக்ட் வயரில் ஆட்டோ டென்ஷனர்கள் / டெட் வெயிட்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

தூக்குப்பாலத்தை உயர்த்தி இறக்கும் போது 700 டன் எடையும், 24 இரும்பு ரோப்புகள் தாங்குகிறது. ரோப்புகளை தயாரித்த நிறுவனத்தின் முதன்மை பொறியாளர்கள் குழுவினர், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து வந்து நேற்று முதல் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் ரயில்வே பாதுகாப்பு ஆணைய முதன்மை அதிகாரிகள் பாலத்தில் ஆய்வு செய்த பிறகு திறப்பு விழா தேதி குறித்து அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஜார்க்கண்ட் இன்ஜினியர்கள் ஆய்வு: ஆய்வு ரயிலை இயக்கி சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article