திண்டிவனம், பிப். 16: திண்டிவனம் அருகே பாத்ரூமில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டை திறந்து 24 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலையரசி(42) நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் இருந்த பாத்ரூமில் வைத்துவிட்டு அகூர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு 7 மணியளவில் கல்லூரி முடிந்து கலையரசி மகள் தீபிகா வீட்டிற்கு வந்து பாத்ரூமில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்துள்ளார்.
அப்போது, வீட்டின் அலமாரியில் இருந்த பர்ஸ் கீழே இருப்பதை பார்த்துள்ளார். அதை திறந்து பார்த்ததில் பர்ஸில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நெக்லஸ், 5பவுன் ஆரம், 3 பவுன் வளையல் செட், ஒன்றரை பவுன் வளையல் செட், மாட்டல், கம்மல் என மொத்தமாக 24 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபிகா தாய் கலையரசிக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் நகை திருட்டு குறித்து கலையரசி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டி இருந்த வீட்டின் சாவியை எடுத்து 24 பவுன் நகையை திருடிவிட்டு அதேபோல் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பாத்ரூமில் இருந்த சாவியை எடுத்து திறந்து அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.