
ஆக்ரா,
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உதவி காவல் ஆணையாளராக பணிபுரிந்து வருபவர் சுகன்யா சர்மா (வயது 33). இளம் பெண் அதிகாரியான இவர், நகரில் இரவு நேரத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு நிலைமை எப்படி இருக்கிறது? என்று சோதனை செய்வதற்காக, சுற்றுலாவாசி என கூறிக்கொண்டு நகரில் வலம் வந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் வெளிவந்துள்ளன.
அவர், போலீஸ் அதிகாரி என காட்டி கொள்ளாத வகையில் மப்டி உடையில் ஆக்ரா கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வெளியே நின்று கொண்டார். இதன்பின் அந்த இரவில் போலீசாரை தொலைபேசியில் அழைத்து, இரவு வெகுநேரம் ஆகி விட்டது. சாலையில் தனியாக அச்சத்துடன் இருக்கிறேன். உங்களுடைய உதவி தேவை என கூறியுள்ளார். மறுபுறம் பேசியவர், பாதுகாப்பான இடத்தில் நிற்கும்படி கூறி விட்டு, அதிகாரியின் இடம் உள்ளிட்ட விவரங்களை பெற்று கொண்டார்.
இதன்பின்னர், பெண் ரோந்து குழுவில் இருந்து பேசிய ஒருவர், உங்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வருகிறோம் என பேசி தைரியம் அளித்துள்ளனர். ஆனால், அவசரகால பொறுப்பு நடைமுறை எப்படி இருக்கிறது என்பது பற்றி அறிவதற்காக, உங்களை சோதனை செய்தேன். அதில், தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என அவர்களிடம் சுகன்யா கூறியுள்ளார்.
இதன்பின்னர், பெண்களின் பாதுகாப்பு பற்றி அறிவதற்காக வாடகைக்கு ஆட்டோ ஒன்றை அழைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர், பயண கட்டண விவரங்களை கூறியதும், அவரிடம் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என இவர் கூறியுள்ளார். போலீஸ் அதிகாரி என கூறாமல், நகரில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது? என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர், போலீசார் நன்றாக ஆய்வு செய்த பின்னர், சீருடை அணிந்து ஆட்டோவை ஓட்ட தொடங்குவேன் என பதிலளித்துள்ளார். அவர் பாதுகாப்பாக, இறங்க வேண்டிய இடத்தில் அந்த அதிகாரியை இறக்கி விட்டுள்ளார். இந்த பாதுகாப்புக்கான தேர்வில் ஆட்டோ ஓட்டுநரும் தேர்ச்சி பெற்று விட்டார்.
இவருடைய செயலை, ஒவ்வொரு நகரில் உள்ள போலீசும் பின்பற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் நகரத்தில் இரவில் சந்திக்க கூடிய இன்னல்களை, பொதுமக்களில் ஒருவராக இருந்து நீங்கள் அனுபவங்களை எதிர்கொள்ளுங்கள் என்றும் சுகன்யா சர்மா சிறந்த வேலையை செய்துள்ளார் என்றும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.