இம்பால்: இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 செயற்கைக்கோள் மூலமாக நாட்டின் எல்லைகள் கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியா ஒரு துடிப்புமிக்க விண்வெளி சக்தியாக மாறி வருகின்றது. 2040ம் ஆண்டுக்குள் இந்தியா அதன் விண்வெளி நிலையத்தை கொண்டு இருக்கும். இன்று 34 நாடுகளில் இருந்து 433 செயற்கைக்கோள் இந்தியாவில் இருந்து ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன. இன்று நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நோக்கத்திற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவை நாட்டின் எல்லைகளை, கடல் பகுதியை கண்காணித்து வருகின்றன.
காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டை படிப்பதற்கு வானிலையை கண்காணிப்பதற்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஜி20 நாடுகளுக்காக ஒரு செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
செயற்கைக் கோள் ஏவுதலை பார்வையிடும் எம்பிக்கள் குழு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வருகிற 18ம் தேதி இந்தியா பூமி கண்காணிப்பு தொடர்பான இஓஎஸ்-09 என்ற செயற்கைக்கோளை ஏவவுள்ளது. இது அனைத்து வானிலை நிலைகளிலும் விண்வெளியில் இருந்து அதன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் எம்பிக்கள் குழு இந்த செயற்கைக்கோள் ஏவுதலை காண்பதற்கு திட்டமிட்டுள்ளது.
The post பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் 10 செயற்கைக்கோள்கள்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் appeared first on Dinakaran.