பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால் பயனில்லை; மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்: ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் மோடிக்கு கடிதம்

4 weeks ago 6


டெல்லி: மணிப்பூருக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால் பயனில்லை என்றும், மாநில முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு மே 3ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூக மக்களிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், கடந்த 17 மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதுவரை 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மணிப்பூர் பிரதிநிதிகள் குழுவின் அமைதிக்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மெய்தீஸ், குக்கி, நாகா ஆகிய சமூகங்களை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும், மணிப்பூரில் நிலவி வரும் மோதலுக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கும், கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தினர். ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்திருந்தது. டெல்லி கூட்டம் முடிந்து மணிப்பூர் திரும்பிய பிரதிநிதிகளில் ஒருவரான மாநில சட்டசபை சபாநாயகர் தோக்சோம் சத்யவ்ரத் சிங் உட்பட 19 பாஜக எம்எல்ஏக்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை கூட்டாக எழுதியுள்ளனர். குக்கி, மெய்தீஸ், நாகா எம்எல்ஏக்கள் சார்பில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ‘மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டுமானால், முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மணிப்பூரில் நடக்கும் வன்முறையைத் தடுக்க இதுவே (முதல்வரை நீக்குவது) ஒரே வழி.

வெறும் பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால் மட்டுமே ஒன்றும் செய்துவிட முடியாது. இங்குள்ள மக்கள் ஆளும் பாஜக அரசிடம் நிறைய கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆட்சி மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அல்லது அவரை முதல்வர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளனர். ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே தங்களது முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால் பயனில்லை; மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்: ஆளும் பாஜக எம்எல்ஏக்கள் மோடிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article